“பிரதமர் மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசியதற்காக, அவரை கடுமையாகக் கண்டிக்கிறேன்´ என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.
இது தொடர்பாக தில்லியில் பாஜக பொதுக்கூட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மோடி பேசிய போது:
“பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் அமெரிக்காவில் பேச்சு நடத்த மன்மோகன் சிங் ஆர்வம் காட்டுகிறார்.
ஆனால், இந்திய, பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சிலருடன் சனிக்கிழமை சிற்றுண்டி அருந்தியபோது, நமது பிரதமரை நவாஸ் ஷெரீஃப் இழிவாக விமர்சித்துள்ளார்.
“இந்தியப் பிரதமர் கிராமப்புற பெண்மணி போன்றவர்´ என அவர் கிண்டல் செய்துள்ளார். அதைக் கேட்டுக் கொண்டு இனிப்புகளை சுவைத்த இந்திய பத்திரிகையாளர்கள் நவாஸுக்கு அங்கேயே கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு அல்லவா செய்திருக்க வேண்டும்?
இந்திய பிரதமரை மிக மோசமாக விமர்சிக்க நவாஸ் ஷெரீஃபுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இதைவிட ஒரு இழிவு மன்மோகன் சிங்குக்கு நேர்ந்திருக்குமா?
கொள்கை அடிப்படையில் நமக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால், மன்மோகன் சிங்கை வேறு நாட்டு பிரதமர் விமர்சிக்கும் போக்கை சகித்துக் கொள்ள முடியாது. இது தனிப்பட்ட மன்மோகன் சிங்குக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல. 120 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பாகும்.
சொந்த நாட்டிலேயே பிரதமர் மன்மோகன் சிங்கின் நடவடிக்கையை, அவர் சார்ந்த கட்சியின் தலைவர் “முட்டாள்தனமானது´ என விமர்சிக்கிறார்.
அப்படிப்பட்ட மன்மோகனுக்கு பக்கத்து நாட்டுப் பிரதமரிடமிருந்து என்ன மரியாதையை நாம் எதிர்பார்க்க முடியும்´ என்றார் நரேந்திர மோடி.
நடந்தது என்ன?: பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகிவரும் “ஜியோ´ தொலைக்காட்சி சேனல் செய்தியாளர் ஹமீது மிர் நியூயார்கில் உள்ளார்.
அவருக்கும், இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் என்டிடிவி ஆசிரியர் பர்கா தத்துக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை சிற்றுண்டி விருந்து அளித்தார்.
அது தொடர்பாக ஜியோ டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பான செய்தியில் ஹமீது மிர் பேசுகையில் “பிரதமர் மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தும் வகையில் நவாஸ் ஷெரீஃப் கருத்து வெளியிட்டார்´ எனக் கூறியதாகத் தெரிகிறது.
அதை மேற்கோள்காட்டி ரோஹிணி கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.
இதற்கிடையே, இந்திய பிரதமருடன் அமெரிக்கா சென்றுள்ள பத்திரிகையாளர் குழுவில் இடம்பெற்ற பர்கா தத் தனது “ட்விட்டர்´ சமூக வலைதளத்தில் “நவாஸ் ஷெரீஃப் வெளியிட்ட கருத்து திரிக்கப்பட்டுள்ளது.
அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை´ என்று குறிப்பிட்டுள்ளார்.
















