வடக்கு தேர்தல் குறித்த கணிப்பு தவறாகி விட்டது; ஒப்புக்கொண்டார் மகிந்த

Mahinda-Rajapaksa2வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்த தனது கணிப்பு தவறாகி விட்டது என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் எனது கட்சி தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரிடம், நாம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போகிறோம், அதில் நீங்களே வெற்றி பெறுவீர்கள் என்று கூறியிருந்தேன்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம், குறை காண்பது எவருக்கும் இலகுவான காரியம். நிர்வாகத்தை சீராக நடத்துவது கடினமான விடயம்.
எனவே தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, வடக்கு மாகாணசபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம்.

சில இராஜதந்திரிகள் என்னிடம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றி கேட்டபோது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி கொள்ளும் என்று கூறியிருந்தேன்.

எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்து விட்டது. நாம் அங்கு 7 ஆசனங்களிலேயே வெற்றி பெற்றுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாகவும், யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply