தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்

vote-boxsநடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட பகுதி மக்களின் 78 வீத ஆதரவு வாக்குகளைப் பெற்று 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைக் கைப்பற்றி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

வெற்றியானது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட போதிலும்கூட இது ஒரு சாதனை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தெளிவான முடிவு

கட்டட அடிக்கல் நாட்டல், திறப்பு விழாக்கள், புகையிரத சேவை ஆரம்பம், பெரும் பரப்புரைப் பேரணிகள் என அரச தரப்பு எங்கும் ஒரு அபிவிருத்தி மாயையைப் பரப்பியிருந்தது. இன்னொரு புறம் வன்முறைகள், மிரட்டல்கள் என அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் கட்டவிழ்க்கப்பட்டன.

ஆளுங்கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் ஆளுநர் உட்பட அரச அதிகாரிகள் களமிறக்கி விடப்பட்டனர். திணைக்களங்களின் வாகனங்கள், அதிகாரங்கள் உட்பட அரச வளங்கள் தாராளமாகவே பயன்படுத்தப்பட்டன. சில அரச தரப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் படையினர் நேரடியாகவே இறங்கிச் செயற்பட்டனர்.

இப்படியான நெருக்கடிகளும் விதி மீறல்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் வட பகுதி மக்கள் அவர்களை நிராகரித்ததன் மூலம் தமது அபிலாஷைகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

வடமாகாணத் தேர்தல் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தமிழ் மக்கள் தமது உறுதியான அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர்.

ஒன்று பட்ட இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம் என்ற கோரிக்கையே தமிழ் மக்களின் உறுதியானதும், இறுதியானதுமான முடிவு என்பது தெளிவாகவே முன்வைக்கப்பட்டுவிட்டது.

இதைத் தவிர்ந்த எந்த ஒரு முடிவையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதும் துலாம்பரமாகிவிட்டது. இம்முறை வடமாகாண சபைத் தேர்தலில் தென்னிலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்சிகள் உட்படப் பல கட்சிகளும் போட்டியிட்டன.

இதில் நகைப்புக்கிடமான விடயம் என்னவெனில் இவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டது மட்டுமன்றி தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள்.

கட்சிகள் விரட்டியடிப்பு

இவர்களில் முக்கியமான ஒரு தரப்பினர் ஜே.வி.பியினர். இவர்கள் ஒன்றாக இருந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையை பிரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றவர்கள்.

இன்று கிழக்கு மாகாணம் வடக்கை விட்டுப் பிரிந்து மாகாண சபையின் அதிகாரம் அரச தரப்பிடம் செல்ல அடியயடுத்துக் கொடுத்தவர்கள். அதுமட்டுமன்றி போர் மும்முரமாக இடம்பெற்ற வேளையில் தமிழ் மக்களின் அழிவுகளைப் பொருட்படுத்தாது போரில் அரச தரப்புக்கு எல்லாவித ஆதரவையும் வழங்கியவர்கள்.

தமிழ் மக்கள் மத்தியிலுள்ள இடது சாரிச் சிந்தனைப் போக்குடையவர்களை சிவப்புச் சட்டையைக் காட்டிக் கவர முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினர். ஆனால் தமிழ் மக்கள் முற்றுமுழுதாகவே அவர்களை நிராகரித்துவிட்டனர்.

அதனால் அவர்கள் தேர்தல் முடிந்த பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் வெற்றி பெற்றதால் பிரிவினை முயற்சிகள் தொடர்பாக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் இனவாத முகத்தைப் பகிரங்கமாகவே காட்டிவிட்டனர்.

“ஈறோஸ்’ என அழைக்கப்படும் ஈழ மக்கள் புரட்சிகர அமைப்பும் இடதுசாரி சிந்தனை கொண்ட தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்தது தான். அரசின் விசுவாசிகளான அவர்களையும் தமிழ் மக்கள் இங்கு காலூன்ற அனுமதிக்கவில்லை.

தமிழ்மக்களுக்கு எதிரான போருக்குத் தலைமை தாங்கி வழி நடத்தி தமிழ் மக்களுக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியினரும் வடக்கில் போட்டியிட்டனர். தேர்தல் காலத்தில்கூட தமிழ் மக்கள் யாரும் காணாமற் போகவில்லை எனத் துணிந்து கூறியவர் அவர்.

விடுதலைப் புலிகளுக்கும் ஐ.தே.கட்சி அரசுக்கும் பேச்சு இடம்பெற்றபோது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற மறுத்து பேச்சில் பின்னடைவு ஏற்பட வைத்தவர் இவர் என்பதையும் மறந்து விடமுடியாது. இவருக்கும் தமிழ் மக்கள் படுதோல்வியையே பரிசாகக் கொடுத்தனர்.

போட்டியிட்ட மற்றொரு கட்சியான சிறிலங்கா மக்கள் கட்சியையும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. இன்னும் பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் வந்து போயின. எல்லோருமே கட்டுப் பணங்களையே இழந்து தமிழ் மக்களை இலகுவில் ஏமாற்றிவிட முடியாது என்பதைப் புரிந்து கொண்டனர்.

கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி வடக்கில் ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது. ஆனால் தற்சமயம் இடம்பெற்ற தேர்தலில் மாகாண சபையில் ஒரு ஆசனத்தைக் கூடப் பெறமுடியவில்லை.

ஐ.தே.கவுக்கும் இடமில்லை

தியாகராசா மகேஸ்வரன் போர் மும்முரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலிருந்து துணிச்சலாகத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே அவரின் மனைவி கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது வெற்றிபெற்றார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு நேர்மையாகக் குரல் கொடுப்பதில்லை. அதுமட்டுமன்றி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராஜா துவாரகேஸ்வரன் தனது பரப்புரையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே திருப்பியிருந்தார்.

அதன் காரணமாக அவர்கள், இருந்த கொஞ்சநஞ்ச ஆதரவையும் இழக்க வேண்டிய நிலை எழுந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மூன்று பிரிவினர் போட்டியிட்டனர். சகல வன்முறைகளையும் தேர்தல் விதிகள் மீறலையும் இவர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

முதலாவது பிரிவினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினர். இவரின் தந்தை ஒரு துப்பாக்கிச் சண்டியர். கடந்த பொதுத் தேர்தலின்போது யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை வழிமறித்துத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர்.

இப்போது இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சர்வானந்தாவுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் எனக் கூறி கைது செய்யப்பட்டவர்.

அடுத்த குழுவினர் இராணுவத்தினரின் ஆதரவுடன் போட்டியிட்டவர்கள், இவர்களுக்காகப் படையினரே எல்லாமும் செய்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் இவர்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனினும் அங்கஜன் இராமநாதனே இவர்களின் பிரதான இலக்கு.

இந்த இரு தரப்பினரும் ஒருவரோடு ஒருவர் துப்பாக்கிச் சமர் உட்படப் பல வழிகளிலும் மோதிக் கொண்டனர். ஒருவரை எதிர்த்து ஒருவர் பிரசாரங்களையும் பெருமளவில் மேற்கொண்டனர்.

எனினும் அங்கஜன் இராமநாதன் ஓரளவு வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றிக் கொண்டார். இராணுவத்தினரின் ஆசி பெற்ற குழுவினருக்கு ஒரு ஆசனம் கூடக் கிடைக்கவில்லை.

மண்கெளவிய ஈ.பி.டி.பி

அடுத்த தரப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி. பியினர். கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இவர்களுக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன.

ஆனால் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக மிகக்குறைந்த வாக்குகள் பெற்று இரு ஆசனங்களே கிடைத்துள்ளன. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோ­த்துடன் வீணைச் சின்னத்துடன் ஒரு காலத்தில் தேர்தலில் களமிறங்கியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மெல்ல மெல்ல கோ­த்தையும் கைவிட்டு வீணையையும் வெற்றிலைக்குள் கரைத்துவிட்டு மாகாண சபையில் களமிறங்கினார். அழுகிய வெற்றிலைகளுக்கு வாக்களிக்காமல் நல்ல வெற்றிலைகளுக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் பஸில் ராஜபக்­வினால் வடக்கின் குறுநில மன்னர் எனப் போற்றப்பட்டவர். இப்போது டக்ளஸா றெமிடியஸா அல்லது அங்கஜனா குறுநில மன்னர் என்ற குழப்பம் ஆரம்பித்து விட்டது.

ஒரு காலத்தில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக விளங்கிய பிள்ளையான் என அழைக்கப்பட்ட சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்து ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக மாறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்தமையைப் பயன்படுத்தி அவர் கிழக்கின் முதலமைச்சரானார்.

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிப்பது உட்படப் பல விடயங்களில் அரசுக்கு ஆதரவளித்துத் தனது பதவியைப் பாதுகாத்துக் கொண்டார். எனினும் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியைச் சேர்ந்த அப்துல் மஜீத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிள்ளையான் அரச தரப்பாலும் கைவிடப்பட்டு தமிழ் மக்களாலும் வெறுக்கப்பட்டு அரசியல் அநாதையானார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பியினர் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் புறமொதுக்கப்பட்டமை தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டது.

அதேவேளையில் அரச தரப்பினரும் படையினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கே முன்னுரிமை வழங்கினர். அமைச்சர் டக்ளஸ் தொடர்ந்து அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்ட காரணத்தால் தமிழ் மக்களும் அவரை முற்றாக ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. வெகுவிரைவில் அவருக்கும் பிள்ளையானுக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டால் ஆச்சரியமில்லை.

தமிழன் ஏமாறமாட்டான்

எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லியுள்ளனர். அதாவது தமிழ் மக்களிடம் போலியான அபிவிருத்தி நாடகங்களையும் சலுகைகளையும் முன்வைத்து ஏமாற்ற முயலும் எவரும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள்.

நேர்மையாகவும் அர்ப்பண உணர்வுடனும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற உழைப்பவர்களை மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மக்களை ஏமாற்ற முயல்பவர்கள் அரசியல் அநாதைகளாக மாறி விலாசமே இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்பது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகும்.

Tags: , ,

Leave a Reply