மிகவும் ஆபத்தான லாம்ப்டா வைரஸ் இந்தியாவில் இல்லை: மத்திய சுகாதாரத்துறை!

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறும் தன்மை கொண்டிருப்பதால் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. இது டெல்டா கொரோனா, டெல்டா பிளஸ் கொரோனா என அடுத்தடுத்து உருமாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஜூன் 14ம் தேதி உலக சுகாதார நிறுவனம் லாம்ப்டா வகை வைரஸ் உருவாகி இருப்பதாக அறிவித்தது.

இந்த வகை வைரஸ் உலகின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாகவும், கொரோனா வைரஸை விட அதிகளவில் பரவக்கூடிய மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த போதுமான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. லாம்ப்டா வகை வைரஸ் புதிதாக பரவிய வைரஸ் அல்ல; இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனோவால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு 80% நோய்த் தொற்று ஏற்பட இந்த வைரஸ் காரணமாக அமைவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் தடுப்பூசியின் மூலம் உருவாகியுள்ள ஆன்டிபாடிகளுக்கு எதிரான மேம்பட்ட சக்தியை கொண்டிருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் லாம்ப்டா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!