புத்தளத்தில் மீண்டும் தேர்தலை நடாத்துமாறு கோரி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, மீளத் தேர்தலை நடாத்துமாறு ஜனசெத பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரட்ன தேரரால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரையில் கடந்த 21ம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளின் படி உறுப்பினர்களை பதவிப் பிரமாணம் செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபை தேர்தலுக்குப்பின்னர் புத்தளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் அவை எண்ணப்பட்டவை என்றும் கடமையயில் இருந்த அதிகாரிகளின் கவனக் குறைவே காரணம் எனவும் மீண்டும் தேர்தல் நடத்த அவசியம் இல்லை இருப்பினும் உயர்நீதிமன்றம் கோரினால் மாத்திரமே நடாத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















