தான் செய்யும் வேலைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விடைகொடுப்பர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் வீடியோ எடிட்டர் ஒருவர் நடனமாடி அதனை யூடியூப்பில் தரவேற்றம் செய்து வித்தியாசமாக வேலைக்கு விடைகொடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தாய்வான் எனிமேஷன் நிறுவனமொன்றில் வீடியோ எடிட்டராக பணிபுரிந்த அமெரிக்க யுவதியான மரினா ஷிப்ரின் என்பவரே இவ்வாறு விநோமாக வேலைக்கு விடைகொடுத்துள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத நிறுவனத்தில் ஊடகவியல் மற்றும் வேடிக்கை இணைந்த வேலை என்பதானல் கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப உறவுகள், நேரம் மற்றும் சக்தியினை தியாகம் செய்து விருப்பத்துடன் உழைத்துள்ளார் மரினா.
‘எனக்கு இந்த வேலை பிடித்திருந்தது. ஆனால் தனது முதலாளி தரத்தினை விட ஒவ்வொரு வீடியோவும் பார்க்கப்படும் எண்ணிக்கையிலேயே அக்கறை செலுத்துகிறார்.’
‘எண்ணிக்கையை விட தரமே சில நேரங்களில் முக்கியமாகும'; என தனது முதலாளிக்கு விளக்கவே இவ்வாறானதொரு வீடியோவினை உருவாக்கியுள்ளார்.
இதற்காக காலை 4.30 மணிக்கே அவர் பணிபுரிந்த அலுவலகத்துக்கு சென்று அலுவலக மேசை, கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் வேலை, உள்ளடக்கத்தைப் பற்றி கவலைப்படாத முதலாளி போன்ற விடயங்களை விளக்கி ஆங்கில உபதலைப்பிட்டுள்ளார். இறுதியில் தான் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமன்றி வேலையிலிருந்து விலகுவதற்கான பல காரணங்களை தனது வலைப்பதிவிலும் வெளியிட்டுள்ளார். இதில் ஊடகவியல் இறந்துவிட்டது (எனக்கு) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மரினா தரவேற்றம் செய்துள்ள வீடியோ தற்போது யூடியூப்பில் சுமார் 4 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















