ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்தடைந்த 2-வது விமானம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இன்று 120 இந்திய தூதரக அதிகாரிகள் மாறும் ஊழியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன. பல நாடுகளைச் சேர்ந்த தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இவர்களில் பலர் நாட்டை விட்டு சென்று விட்ட நிலையில் மற்றவர்கள் தங்களது நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்ற ஏற்பாடு செய்தது. இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக விமானப்படையை சேர்ந்த சி-17 சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 120 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எந்த சிக்கலுமின்றி, 120 அதிகாரிகளுடன் இந்திய விமானப்படை விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் காலை 11.15 மணியளவில் தரையிறங்கியது.

ஏற்கெனவே முதல் விமானத்தில் 129 இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில் மேலும் 120 பேர் இன்று வந்துள்ளனர்.

இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக மீண்டும் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

தற்போது 420 இந்தியர்கள் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!