வழிபாட்டுத் தலங்கள் மீதான தடை தொடரும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் எப்போது அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண் 552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11-9-2021-ன்படி, 31-10-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31-10-2021 காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி