35 பேரை நூதனமாக ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண்!

தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற 41 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அறிமுகமாகினார்.

வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாகவும், ஒரு முக்கிய அரசியல் பிரமுகருடன் எடுத்த புகைப்படங்களையும் தன்னிடம் காட்டினார்.

அதன் பின், மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணி நிரந்தரம் பெற்றுத்தருவதாகவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறினார். இதனை நம்பி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
ஆனால், நீண்ட காலமாகியும் பணி மற்றும் பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020 வரை சுமார் 35 பேரை ஸ்டெபி ஏமாற்றியது தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஸ்டெல்லா, சென்னை புழுதிவாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பலரிடம் தன்னை பிரபலமான வழக்கறிஞர் என்று சொல்லி அறிமுகமாகியுள்ளார்.

அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் வக்கீல் உடையில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அரசியல்வாதியிடம் தனக்கு நிறைய செல்வாக்கு இருப்பதாக சொல்லி, மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வரும் தூய்மை பணியாளர்களிடம் நிரந்தரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்.

இதை வைத்து தான், 35 பேரிடம், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். பொலிசார் தன்னை தேடுவதை அறிந்த அவர் உடனடியாக தலைமறைவாகினார்.

அதன் பின் பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், அவரிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!