ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. எனினும் நேற்றிரவு வரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் ஜனாதிபதி, நேரம் ஒதுக்கினால் இன்றைய தினமே சந்திப்பு இடம்பெறலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்னமும் பதவியேற்கவில்லை.
அத்துடன் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளுக்கும் யாரும் நேற்றுவரை நியமிக்கப்படவுமில்லை. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்பது தொடர்பிலும் இன்னமும் தீர்மானிக்கப்படாமலேயே உள்ளது.
இந்த நிலையில் அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிப்பதற்கும், யார் முன்னிலையில் பதவியேற்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி தலைவர்களிடையே இன்று வெள்ளிக்கிழமை காலை கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நியூயோர்க்கில் இருந்து நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளமையாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற விருப்பதாலும் பங்காளிக் கட்சிகளுடனான இன்றைய கலந்துரையாடல் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
















