வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துச் செயற்பட்டமையால் சிங்களக் கட்சிகள் என்னை அச்சுறுத்தியதாலேயே நான் இலங்கையை விட்டுத் தமிழகத்துக்குத் தப்பி வந்தேன் என்று ஈழத்தமிழரான எம். செல்வராஜா தெரிவித்துள்ளார்.
அதிவேகப்படகில் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சென்று இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியவரே செல்வராஜா. அதிவேகப் படகு மூலம் நேற்று முன்தினம் காலை தனுஸ் கோடி – முனைப்பகுதியைச் சென்றடைந்த இவர் தனுஸ்கோடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணைகளில் தான் 10ஆயிரம் ரூபா செலுத்தியே படகில் வந்ததாக கூறியுள்ளார். அத்துடன் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துச் செயற்பட்டதால் சில சிங்களக் கட்சிகள் தன்னை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெயின்ரிங் தொழில் செய்யும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் தமிழ் நாட்டுக்குத் தப்பி வந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் திருச்சி முகாமில் வசித்து வந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார். இந்த நிலையில் செல்வராஜா கடவுச்சீட்டுச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
















