பழைய வாகனங்களை பயன்படுத்தினால் அபராதம்: வெளியான புதிய கொள்கை!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று வாகன தகுதிநீக்க கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பராமரிப்பு மற்றும் எரிபொருள் தேவைக்காக அதிக செலவை ஏற்படுத்தும் வாகனங்களை தவிர்க்கும் நோக்கிலும் பழைய மற்றும் மாடுபாடு ஏற்படுத்தும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “பதிவுசெய்யப்பட்ட வாகன தகுதி நீக்க மையத்தில் பழைய வாகனங்களை அளிக்கும்பட்சத்தில், அவர்கள் வைப்புச் சான்றிதழை கொடுப்பார்கள். வாங்கிய புதிய வாகனத்தை பதிவு செய்ய செல்லும்போது அந்த சான்றிதழை அளித்தால் புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பழைய வாகனத்தை தொடர்ந்து பயன்படுத்தும்பட்சத்தில் அபராதம் விதிக்கவும் புதிய கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோட்டார் வாகனங்களுக்கான தகுதி சோதனையை நடத்துவதற்கான கட்டணம்
அதிகரிக்கப்படுகிறது. தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

மத்திய பட்ஜெட் 2021-22ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தானாக முன்வந்து வாகனங்களை தகுதி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, தனிப்பட்ட வாகனங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15ஆண்டுகளுக்கு பிறகும் தானியங்கி மையங்களில் தகுதி சோதனைக்கு உட்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!