அரசின் ஊழல்கள் குறித்த தகவல்களை அமைச்சர்களே எமக்கு வழங்குகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்து கொண்டு வருகின்றமையையும் எம்மால் உணர முடிகின்றது.
இவ்வாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசினால் நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டு வருகின்றமையை நாம் கூறியே ஆக வேண்டும் என்கின்ற அவசியமில்லை. இந்த நிலையில் அரசு மாத்தறையிலிருந்து ஜனாதிபதியின் சொந்த ஊர் வரையிலான 27 கிலோ மீற்றர் தூர ரயில் பாதையைப் புனரமைக்கவுள்ளது.
இதற்காக சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாகப் பெறவுள்ளது. இந்தத் தொகையை மக்களே ரூபாவில் கணக்குப் பார்த்துக் கொள்ளட்டும். இதுபோன்ற பல ரயில் பாதைகளையும் புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இப்படியான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு 7 மில்லியன் டொலர் ஊழல் அரசுக்குள் இடம் பெறுகின்றமை முக்கிய விடயமாகும். இப்படியான ஊழல்களுக்கு அமைச்சர்களைக் குறை கூறமுடியாது.
காரணம் அவர்கள் இன்று, ஜனாதிபதி அலுவலகத்தால் தயாரித்து அனுப்பப்படும் பத்திரங்களுக்கு கையயழுத்தை மாத்திரமே இடும் சிற்றூழியர்களின் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இது போன்ற செயல்களை எதிர்க்கவோ அல்லது தட்டிக் கேட்கவோ பலமில்லாமல் போயுள்ளது.
சொல்லப்போனால் அமைச்சர்களின் நிலை இன்று அரசுக்குள் இயங்கும் சமிக்ஞை விளக்குகளைப் போன்று தான் காணப்படுகிறது. இதனால்தான் அரசின் ஊழல்கள் குறித்த தகவல்களை இவர்கள் எமக்கு வழங்குகின்றனர்.
இவ்வாறான செயல்களால் மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்து கொண்டு வருகின்றமையையும் எம்மால் உணர முடிகின்றது.- என்றார்.
















