இம்முறை தரம் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் குறைவாக புள்ளிகளை பெற்ற மகனுக்கு சூடுவைத்த தந்தையொருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று முன் தினம் இரவு 8.00 மணியளவில் தந்தையார் தனது மகனுக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.
சந்தேகநபரின் மகன் பொகவந்தலாவ தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பதுடன் அவர் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 92 புள்ளிகளை பெற்றதன் காரணமாகவே மகனின் கால் மற்றும் முகத்திலும் சந்தேகநபர் சூடு வைத்துள்ளார்.
சிவதர்ஷன் என்ற 10 வயதான குறித்த சிறுவன் தந்தை சூடு வைத்ததையடுத்து வலி தாங்க முடியாமல் கதறியுள்ளான்.
சிறுவனின் சத்தத்தை கேட்ட அயலவர்கள் உடனே இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் நேற்று குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சிறுவன் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேகநபரை இன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
















