தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம்
அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதி கனமழை பெய்யக்கூடிய இடங்கள்
நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கடலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சூறாவளி காற்று
12-ந்தேதி வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் நாளை மறுதினம் வரை சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9-ந்தேதிக்குள்(இன்று) கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பெரம்பூர் 14 செ.மீ., செய்யூர், மதுராந்தகம், சோழவரம் தலா 13 செ.மீ., தண்டையார்ப்பேட்டை 10 செ.மீ., அயனாவரம், சென்னை கலெக்டர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, பரங்கிப்பேட்டை, பள்ளிப்பட்டு, அம்பத்தூர், பூந்தமல்லி, செங்குன்றம் தலா 9 செ.மீ., தாம்பரம், கோவை தெற்கு, ஆலங்காயம், ஊத்துக்கோட்டை, டி.ஜி.பி. அலுவலகம், செங்கம், மரக்காணம் தலா 8 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், ஏ.ஜி.எஸ். கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர். நகர், பொன்னேரி, திருக்கோவிலூர், அண்ணா பல்கலைக்கழகம், செங்கல்பட்டு, வல்லம், வளவனூர் தலா 7 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
முன்எச்சரிக்கை நடவடிக்கை

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அதை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதை கண்காணிக்க உயர் அதிகாரிகளையும் நியமித்து இருக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!