சிங்கள இனத்துடன் தனிப்பட்ட உறவுத் தொடர்புகளை கொண்டவர் என்ற கண்ணுக்குத் தெரியும் உண்மைகளை மறைத்து விட்டு விக்னேஸ்வரனை தமிழ் இனவாதியாக காட்டுவதற்கு சிங்கள இனவாத கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர்.
தனியயாரு தமிழ் நாட்டுக்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு கிடையாது என்பது சிங்கள இனவாதிகளுக்கு பெரும் கவலையாக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில், ஜாதிக யஹல உறுமயவின் பிரசாரச் செயலாளர் நிஷாந்த வர்ணசிங்வுடன் கலந்து கொண்டு விவாதிக்கு போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விக்னேஸ்வரனும், சம்பந்தனும் தமிழ் இனவாதிகளாக இருந்தால் தான் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் வண்டி ஓடும் என்பது சிங்கள இனவாத கூட்டமைப்பினருக்கு நன்கு தெரியும்.
ஆனால் விக்னேஸ்வரன் தமிழ் இனவாதி இல்லையயன்பது இவர்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது.
நடந்து முடிந்த மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்த சிங்கள இனவாத கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
சிங்கள இனத்தையும் ,சிங்கள நாட்டையும் காப்பாற்ற கிளம்பியுள்ளதாகத் சொல்லிக் கொள்ளும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன ஆகிய சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளின் வேட்பாளர்களை சிங்கள மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
ஆகவே இந்த நாட்டில் இன்று இனவாதம் தோல்வியடைந்து வருகின்றது. உங்களது இனவாத கூட்டு கட்சிகளின் கருத்துக்களும், பொதுபலசேனா போன்ற அமைப்புக்களின் கூச்சல்களும் மக்களை சலிப்படைய வைத்துள்ளன.
சிங்கள மக்கள் எங்களது அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொண்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
















