நமது உடலில் சுமார் 72 ஆயிரம் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவற்றில் இதயத்திலிருந்து உடலின் இதர பாகங்களுக்கு ரத்தம் கொண்டு செல்லும் மிக முக்கியமான ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
கொழுப்பு படிவம் போன்ற சில காரணங்களால் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் உறைவதன் காரணமாக “ஆஞ்சைனா’ எனப்படும் நெஞ்சுவலி ஏற்படக்கூடும். பின்னர் மாரடைப்பும் வரக்கூடும். ஆனால் எந்த அறிகுறியும் இதற்குத் தெரியாது. இப்போது 35-50 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
50 முதல் 70 சதவீதம் வரை ஏற்பட்டுள்ள ரத்தக் குழாய் அடைப்புகளைத்தான் இசிஜி, எக்கோ, டிரெட்மில் போன்ற சோதனைகள் கண்டறிய உதவுகின்றன. அதற்கும் குறைவான சதவீதத்தில் அடைப்புகள் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.
இதனால் 30 சதவீத மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான் “ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட்’ மற்றும் பை-பாஸ் அறுவைச் சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுகின்றன. சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தக் குழாய்கள் உள்ளனவா என்று பரிசோதித்துக் கொண்டால், மாரடைப்பு வருவதற்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதை தடுத்துவிடலாம்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக எடை, உயர் ரத்தக் கொழுப்பு, புகை பிடித்தல், உயர் மன அழுத்தம், இதயநோய் உள்ள குடும்ப பின்னணி ஆகிய பிரச்னை உள்ளவர்கள், ரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாக உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக் கொள்வது மிகவும் நல்லது.
















