பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழும் போது தனக்கும் அடுத்தவருக்கும் பிரயோசனமான வாழ்க் கையை வாழ்வதுடன் எமது பெயரை நிலைநாட்டும் சாதனையொன்றையும் நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும் என்பவர்களுக்கான தளமே கின்னஸ் உலக சாதனைகள்.
ஒவ்வொரு வருடமும் வெளிவரும் கின்னஸ் புத்தகம், பல்துறைகளில் சாதனை படைத்தவர்களின் பெயர்களை சுமந்துவரும். அந்த சாதனைகளில் சில வேடிக்கையான சாதனைகளாகவும் சாதரணமானதாகவும் புதுமையானதாகவும் இருக்கும். அவை முயற்சித்தால் நாமும் முறியடித்து விடலாமே என்ற எண்ணத்தை தோற்விக்கும்.
எத்தனை கனமான விடயத்தையும் தாங்கும் மூளையும் இதயமும் அத்தனை கனமானதல்லவே. அதுபோலவே சாதனையாளனும் சாதாரணமாக இருக்கிறான் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரினதும் மனதிலும் விதைப்பதுபோல், கின்னஸ் புத்தகத்தின் ஆரம்பமும் சாதாரணமாகவே அமைந்தது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் ஆரம்பம் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் அயர்லாந்தினன் வேக்ஸ்போர் என்ற இடத்திற்கு சேர் ஹக் பீவர், பறவை வேட்டைக்குச் சென்றார். இதன்போது வேட்டையாடப்படும் பறவைகளில் ப்ளோவர் (புறாவை ஒத்த ஒரு வகை பறவை) எனப்படும் பறவைதான் ஐரோப்பாவிலேயே வேகமானதா என அறிய முற்பட்டார்.
ஆனால் அதற்கான எதுவிதமான அதிகாரபூர்வ ஆதாரங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. இதற்கான குறிப்பு புத்தகங்களையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து இது போன்ற விடயங்களை அறிய செர் ஹக் பீவரே ஒரு புத்தகத்தினைக் உருவாக்கினார். அதுவே கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம்.
1954ஆம் ஆண்டு முதன் முறையாக சாதனைகள் அடங்கிய புத்தகமொன்றினை ப்லீட் ஸ்ரீட் செய்திதாளுடன் இணைத்து இரட்டையர்களான நொரிஸ் மற்றும் ரோஸ் மெக்வேர்டர் விநியோகித்தனர்.
இவர்கள் 1000 பிரதிகளை அச்சிட்டு இலவசமாக வழங்கினர். இதற்கு அடுத்த வருடமே 1955ஆம் முதன் முறையாக அதிகாரபூர்வமான கின்னஸ் புத்தகம் (Guinness Book of Rcords) என்ற பெயரில் பிரித்தானியாவில் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றது.
அன்றிலிருந்து இன்று வரையில் 26 மொழிகளில் 100 இற்கும் அதிகமான நாடுகளில் 115 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அதிகளவில் விற்பனையாகும் புத்தகம் மட்டுமன்றி அதிகளவில் திருடப்படும் புத்தகங்களிலும் கின்னஸ் புத்தகம் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் பல சாதனைகளை தாங்கி வரும் இப்புத்தகத்தின் 2014ஆம் ஆண்டிற்கான பதிப்பு இம்முறை கடந்த 12ஆம் திகதி வெளியானது.
கின்னஸில் இடம்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
இதில் கடந்த ஒரு வருடத்தில் சாதனைகள் படைத்த பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களின் பெயர்கள் இம்முறை இடம்பெற்றது போல இனி வரும் பதிப்புகளில் இடம்பெற நாம் செய்ய வேண்டியவை எவை என எப்போதாவது சிந்தித்திருக்கறீர்களா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இவைதான்.
கின்னஸ் உலக சாதனைகளுக்கென பிரத்தியேகமாக http://www.guinnessworldrecords.com என்ற இணையத்தளம் உள்ளது. இதில் உங்களது சாதனையை இணைப்பதற்கான விண்ணப்பப்படிவம் உண்டு. உங்களிடம் ஏதாவது விசேடமான திறமை உண்டு எனில் இதில் உங்களது சாதனை குறித்து பதிவு செய்துகொள்ளுங்கள்.
பின்னர் உங்களது விண்ணப்பம் தொடர்பில் ஆராயப்பட்டு 6 முதல் 12 வாரங்களில் உங்களுக்கு பதில் கிடைக்கும். இவை முற்று முழுதாக இலவசமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் உங்களுக்கு விரைவில் வெறும் 3 வேலை நாட்களில் பதில் கிடைக்க வேண்டுமெனில் மட்டும் 450/700 அமெரிக்க டொலர்கள் (சுமார் 60,000/92,500 ரூபா) கட்டணம் செலுத்த வேண்டும்.
சாதனைகள் எவ்வாறு அமைய வேண்டும்?
சாதனைகள் உலக சாதனைகளாக மாற கின்னஸ் அமைப்பு வரையறுத்துள்ள விதிகளுக்கு அமைவாக இருக்க வேண்டும்.
மிகப்பெரிய, மிக உயரமான, அதிநீளமான, அதிவிரைவாக, அதி பாரமான இவ்வாறு உயர் மட்டத்தில் சாதனைகள் அமைய வேண்டும். அது அளவிடப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு விடயத்தில் மாத்திரம் சாதனை கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, கார் பயணம் என்றால் மிக வேகமாக பயணித்தல் அல்லது அதிகமாக தூரமாக பயணித்தல். இவ்வாறில்லாமல் வேகமான காரில் தூரமான பயணம் சாதனையாகக்கொள்ளப்படாது.
இதனை உங்களால் நிரூபிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் அது பின்னர் முடிறியடிக்கப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்வடிப்படைகளில் உங்களிடம் உள்ள திறமைகள் இருந்தால் நீங்களும் கின்னஸ் சாதனையாளராகலாம்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் சில சாதனைகள் கின்னஸின் வகைக்குள் அடங்காவிட்டாலும் சாதனைகளாக தேவை கருதி மாறலாம். அவை மனிதனால் அல்லது இயற்கையால் ஏற்படுத்தப்பட்டதாகவும் அமையலாம்.
எத்துறையில் சாதனை படைக்கலாம்?
என்ன சாதனை படைப்பது என்பது குறித்த ஒரு திட்டம் இருந்தால் அதன் பால் நீங்கள் முயற்சிக்கலாம். அது விசித்திரமானதாக இருந்தாலும் சரி விவேகமானதாக அமைந்தாலும் சரி அதேபோல வேடிக்கையாக அமைந்தாலும் அவை அதி உயர் மட்டம் என்றால் சாதனையாக அமைந்துவிடும்.
ஒரு நிமிடத்தில் அதிக தடவைகள் கைதட்டிக் கூட உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. எனவே சிறிய விடயங்களாக இருந்தாலும் அவை உலக சாதனையாக கவனத்தில் கொள்ளப்படும்.
இவ்வாறு உங்களுக்கு எதுவிதமான யோசனையும் இல்லை என்றால் பழைய சாதனைகளை முறியடிக்க முயற்சிக்கலாம். அல்லது கின்னஸ் இணையப் பக்கத்தில் Explore Records என்ற பகுதியில் முயற்சிக்கூடிய சாதனைகளை இடம்பெறும். இதனை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செய்து முடித்தால் அது சாதனையாக அமையும்.
அண்மையில் ஒரு நிமிடத்தில் முகத்தில் அதிகளவான கடதாசிகளை ஓட்டினால் சாதனை என்ற அம்சமும் ஒரு நிமிடத்தில் அதிக நாணயக் குற்றிகளை அடுக்குவதும் சாதனையாக நிகழ்த்துவதற்கு கின்னஸ் வாய்ப்பளித்திருந்தது.
இது போன்ற இன்னும் ஏராளமான விடயங்கள் சாதனைக்காக காத்திருக்கின்றன. அவை வாரத்திற்கு சுமார் 1000 என்ற ரீதியில் கின்னஸ் அமைப்பாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதாம்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் தொடர்பில் 2005ஆம் ஆண்டு முதல் அதன் பிரதம ஆசிரியராக சேவை புரியும் க்ரேக் கிளண்டே கூறுகையில், புத்தகம், டீ.வி, ஈ புத்தகம், எப்ஸ், புதிய தொழில்நுட்பம் (2014ஆம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகம் 3டி வடிவில் வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.) என எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் கின்னஸ் புத்தகம் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 40 ஆயிரம் சாதனைகள் பட்டியலிடப்படுகிறது. ஆனால் அவற்றில் 10 சதவீதமானவையே புத்தகத்தில் இடம்பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதுவெல்லாம் சாதனையா நினைக்கா மல் இதுவல்லவோ சாதனை நீங்கள் துணிந்து செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதனையாக அமையலாம். இதன் மூலம் உங்களது பெயரும் நாளை பெறுவாய்ந்த கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.
அமானுல்லா எம்.றிஷாத்
















