இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றுக்கு பறிபோன முதல் உயிர்!

ஓமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 2020ம் ஆண்டின் தொடக்கம் முதல், உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, மிக விரைவாகவே பெருந்தொற்று பாதிப்பாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி வரும் கொரோனா தொற்று, இந்தியாவில் இரண்டு அலைகளாக பரவி பெரும் பாதிப்பையும், கடுமையான அளவுக்கு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
    
இருப்பினும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதனால் தொற்று பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய கோவிட் வேரியண்ட் மிக ஆபத்தான வேகத்தில் உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ நெருங்கியுள்ள நிலையில், முதல் முறையாக இந்தியாவில் ஒருவர் ஓமைக்ரான் தொற்றால் உயிரிழப்பை சந்தித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் நபர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அந்த நபர் ஒய்.பி.சவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. அவரின் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு இதனை நேரடி ஓமைக்ரான் மரணம் என அவர்கள் குறிப்பிடவில்லை.

நாட்டிலேயே அதிகளவு ஓமைக்ரான் தொற்று பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அங்கு இதுவரை 450 பேருக்கு இந்த வகை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46% சதவிகிதம் பேர் எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் புதிதாக ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 13,154 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 82,402 ஆக உள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் 4,80,860 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!