வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் ஆதரித்துள்ளார்.
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்´ என்ற மசோதா, குஜராத் சட்டசபையில் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அம்மாநில கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.ஆனாலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்´ என நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.,வில், நரேந்திர மோடியின் அதிருப்தியாளராகக் கருதப்படும் அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
தன்னுடைய, ´மைக்ரோ பிளாக்´கில், அவர் கூறியுள்ளதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும், தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக வாக்களிப்பு இயந்திரத்தில் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான பொத்தான் அமைக்கப்படவுள்ளது. இது நல்ல முயற்சி.
இதேபோல் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். வாக்களிப்பது வாக்காளர்களின் அடிப்படை உரிமை.
அதை அவர்கள் புறக்கணிக்கக் கூடாது. குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு வாக்களிப்பதை சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது.
ஆனால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு அத்வானி கூறினார்.
















