இந்தியாவுக்கான விமான சேவையை தடை செய்த பிரபல நாடு!

சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, தற்போது 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    
இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே சமயம் இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 828 பேர் குணமடைந்த நிலையில் 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. சீனாவைப் போலவே ஹாங்காங்கிலும் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு இதுவரை 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஹாங்காங்கில் வரும் வெள்ளிக்கிழமை முதல் உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள், இரவு விடுதிகள், பார்கள் ஆகியவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் 2 வாரங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!