Notes-மாகாண சபையை ஏற்றுக் கொண்டால் அதுதான் சர்வதேசத்தின் தீர்வாகவும் அமையும்
Notes- கணக்கு ஒன்றின் விடையை தாள் ஒன்றின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த கணக்கை செய்து விடையை கண்டு பிடியுங்கள் என்பது போல செயற்படுவது ஒரு வகையான சர்வாதிகாரம். ஏனையவர்களை முட்டாள்களாக்கும் செயல்.
தென்பகுதியில் உள்ள சாதாரண அரசியல்வாதிகள் போன்று தமிழத்தேசிய கூட்டமைப்பும் செயற்பட முற்படுகின்றது என்ற கோபம் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது. இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது எழுச்சியடைகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு வகையில் அது திசை திருப்பப்படுகின்றது அல்லது மக்களினுடைய விருப்பங்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக அது அமைந்து விடுகின்றது. வேண்டுமானால் அது ஒரு தற்காலிக மகிழச்சியையும்; கொடுக்கின்றது. ஆனால் இந்த வரலாறு தொடர வேண்டுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
தேர்தலுக்கு பின்னரான காலம்
மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வடமாகாண அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில் தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை. முதலமைச்சர் பதவிப் பிரமானம் முதல் அமைச்சர்கள் தெரிவுவரை இழுபறி நிலை ஏற்படுவதற்கு காரணம் எது என்பது மக்களுக்கு தெரிந்த தகவல்தான். ஆனால் சம்பந்தன் அதற்கு கூறும் காரணம் தமிழ் மக்கள் இன்னமும் அரசியலில் குழந்தைகள் என்பது போல இருக்கின்றது. சர்வதேச நாடுகளினுடைய அழுத்தங்கள்தான் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக சம்பந்தன் தமிழத்தேசிய கூட்டமைப்பின் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்ல அமெரிக்காவில் இருந்து தனக்கு தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது என்றும் ஜனாதிபதி முன்லையில் பதவிப்பிரமாணம் செய்யுமாறு அவர்கள் ஆலோசணை வழங்கியதாகவும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழத் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் விளக்கமளித்திருக்கின்றார். இங்கு கேள்வி என்வென்றால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுக்கு எல்லாம் சர்வதேசம்தான் ஆலோசணை வழங்குகின்றதா? ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றபோது தமிழத்தேசிய கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு ஏன் செல்லவில்லை என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு ஜெனீவாவுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா கூறியது என சம்பந்தன் அன்று நடந்த கூட்டத்திலும் கூறியிருந்தார்.
சர்வதேச ஆலோசனைகள்?
வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்ற பேச்சுக்கள் அடிப்பட ஆரம்பித்தபோது தேர்தலில் போட்டியிட வேண்டும் என சர்வதேசம் ஆலோசணை வழங்கியதாக சம்பந்தன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கூறியிருந்தார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் இரணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேசம் ஆலோசணை வழங்கியது என்ற கதையையும் கூறியிருந்தார்கள். முதலமைச்சராக விக்னேஸவரன் நியமிக்கப்பட்டபோது இது சர்வதேசத்தின் நிலைப்பாடு என்றும் சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கூறியிருந்தார்.
இவை நிலாவைக் காட்டி பிள்ளைக்கு சோறு ஊட்டுகின்ற முதிர்ச்சியற்ற செயற்பாடுகள். தமிழத்தேசிய கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்களையும் பொது மக்களைம் தாங்கள் திருப்பதிப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் அவ்வாறு முதிர்ச்சியற்ற செயற்படுகளை தொடர்ந்து முன்னெடுப்பார்களாயின் அது அரசியல் ரீதியான மற்றுமொரு முள்ளிவாய்க்கால் நிலைமைக்கு இட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.
எது இராஜதந்திரம்? விட்டுக்கொடுப்பது என்பது எது? சகிப்புத் தன்மை எது என்ற கேள்விகளுக்கு கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களினால் இன்னமும் சரியான விடை காணமுடியவில்லை. சட்டவல்லுநர்கள் சட்டத்தை மட்டும் படித்து வைத்துக் கொண்டு சாதாரண மக்களின் அரசியல் உணர்வுகள் அவர்களின் தேவைகள் எது என்பதை உணராமல் சர்வதேம் என்பதை விளையாட்டுப் பொருளாக மாற்றி அதனை காண்பித்து இன்னமும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னரான அரசியல் படுகொலைக்கு ஒப்பானதாகவும்.
சுயமான முடிவுகளை எடுங்கள்
முதலமைச்சர் பதவிப் பிரமானமாக இருக்கலாம் அல்லது ஏதுவும் தீர்மானங்களாக இருந்தாலும் அதனை தமிழத்தேசிய கூட்டமைப்பின் முடிவாக அறிவியுங்கள். ஏன் சர்வதேசத்தின் நிலைப்பாடு அதுதான் என்றும், சர்வதேசம் அலோசணை வழங்கியது என்றும் கூறுகின்றீர்கள்? ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்வது அரசியல் காய்நகர்த்தல் என்று ஒரு வார்த்தையில் கூறினால் சரி பிழைகளுக்கு அப்பால் பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அவர்கள்தான் உங்களை வாக்குகளினால் தெரிவு செய்தவர்கள். ஆனால் சர்வதேச நிலைப்பாடு என்று கூறி உங்கள் சக உறுப்பினர்களையும் பொதுமக்களையும்; ஏன் அரசியல் மலடுகளாக்குகின்றீர்கள? அல்லது பொதுமக்களும் உங்களின் தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் அரசியல் மலடுகள் என்று நினைத்துக் கொண்டு ஏன் செயற்படுகின்றீர்களா?
சுயமரியாதை என்ற ஒன்று இருக்கின்றது. அதனை ஏன் மறுதலிக்கின்றீர்கள்?; அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் மன்னர்கள் என்று கூறுவார்கள். ஆனால் 60 ஆண்டுகள் போராடி அழிவுற்று எதுவும் இல்லை என்ற நிலையில் இருக்கின்ற சாதாரண அப்பாவி மக்களின் அரசியல் உணர்வுகளை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற பின்னர் அதனை மற்றுமொரு அரசியல் தேவைக்காக அடகு வைக்கின்ற நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டால் மக்கள்தான் மன்னர்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஏது?
சர்வதேசம் என்று கூறாதீர்கள்
மக்களுக்கு அஞ்சியே சர்வதேசம் என்று நீங்கள் கூறுவதாக கிளிநொச்சியில் உள்ள சாதாரண மக்கள் செய்தியாளர்களிடம் கூறுகின்றனர். ஆகவே மக்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்ற முடிவுக்கும் வரலாம். அது நல்லது. ஆனால் அது மக்களுக்கு பயப்படுவது என்பது அர்த்தம் அல்ல. மக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் அச்சத்தோடு கருதுவதாகவே அதனை கூற வேண்டும். அவ்வாறு மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்று நீங்கள் கருதினால் எடுக்கும் முடிவுகள் பற்றி ஊடகங்கள் மூலமாக அறிவியுங்கள் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து கூறுங்கள். தேர்தல் பிரசாரத்துக்காக மக்களின் வீட்டு வாசல்படிகளை மிதிக்க முடியும் என்றால் நீங்கள் எடுக்கும் தீர்மானம் ஒன்றை தெளிவுபடுத்துவதற்காக ஏன் மக்களின் வீட்டுவாசல்படியை மிதிக்கக்கூடாது? அது உங்களுக்கு கௌரவப்பிரச்சினை இல்லையே? எதற்காக சர்வதேசம் என்று கூறி முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து சங்கடப்படுகின்றீர்கள்?
மக்களை மக்களாக மதியுங்கள், தமிழத்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளையும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் சார்பாக வெற்றிபெற்ற சக உறுப்பினர்களையும் உள்ளுராட்சி சபை, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட உறுப்பினர்கள் என தமிழத்தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரின் கருத்துக்களையும் கேளுங்கள். சக உறுப்பினர்களிடம் இருந்து அபிப்பிராயங்களை பெறுவது என்ற பண்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டுக்கள் வருகின்றன. தமிழத் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் மாத்திரம் முடிவுகளை எடுத்து விட்டு பின்னர் தமிழத் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என பெயரளவில் நடத்தி விட்டு முடிவுகளை அறிவிப்பதாக சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கட்சிக்குள் ஜனநாயக பண்பு இருத்தல் வேண்டும். கணக்கு ஒன்றின் விடையை தாள் ஒன்றின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த கணக்கை செய்து விடையை கண்டு பிடியுங்கள் என்பது போல செயற்படுவது ஒரு வகையான சர்வாதிகாரம். ஏனைய உறுப்பினர்களையும் முட்டாள்களாக்கும் செயல். தேசிய விடுதலை ஒன்றிற்காக போராடும் இனம் ஒன்றின் அரசியல் கட்சிக்குள் ஜனநாயக பண்புகள் இருத்தல் வேண்டும். விடுதலைப் புலிகளிடம் ஜனநாயக பண்புகள் இல்லை என அன்று குற்றம் சுமத்திய தற்போதை மூத்த தமிழ் தலைவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் ஜனநயர்க பண்பு அற்று செயற்படுவது எந்த வகையில் நியாயம்?
இந்தியாவுக்கு செல்லும் திட்டம்?
விக்னேஸவரன்; முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கொண்ட பின்னர் தமிழத்தேசிய கூட்டமைப்பின் முத்த உறுப்பினர்கள் சிலர் இந்தியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வடமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் மாகாணங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக பேசுவதற்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவுக்கு செல்வது, சர்வதேச நாடுகளுக்கு செல்வது எல்லாம் பிரச்சினை அல்ல. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை எங்கு சென்றும் பேசலாம் அதற்குத்தான் மக்கள் ஆணை தந்துள்ளனர். ஆனால் தனிப்பட்ட தேவைகளுக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எப்படியாவது முடக்கி விடவேண்டும் என்று கருதும் சக்திகளிடமும் விலைபோகாமல் செயற்பட வேண்டும் என்பதுதான் பொது மக்களுடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.
ரணில் விக்கிரமசிங்க
தமிழத்தேசிய கூட்டமைப்பின் பலத்தை கொண்டு கொழும்பில் ஆட்சி மாற்றம் செய்யும் திட்டங்களும் சில சர்வதேச சக்திகளுக்கு உண்டு. அதற்காக முன்னரும் பல திட்டங்களை வகுத்து அது தோல்வியில் முடிவடைந்துள்ளன. வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் இந்த முயற்சி மீண்டும் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அங்கில இணையத்தளம் ஒன்றில் விமர்சனம் வெளியாகியிருந்தது., இனப்பிரச்சினை 60 ஆண்டுகள் வரலாறு கொண்டது. அதற்குள் ஐக்கிய தேசிய கட்சியும் அடக்கம். ஆகவே தமிழர்களின் சுயமரியாதையை காப்பாற்ற அதற்கான ஒரு அரசியல் அங்கீகாரத்துக்காக போராடுங்கள். தனிப்பட்ட முடிவுகளை தவிர்த்து கலந்துரையாடுங்கள். எந்த வழியாலவது இலங்கையில் அமைதி ஏற்பட்டால் போதும் என்பதுதான் சர்வதேசத்தின் உண்மையான நோக்கம்.
வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு அரசாஙகம் இணங்கினாலும் சரிதான் அல்லது மாகாண சபையாக இருக்கலாம். கிராம சபையாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் இலங்கை அரசாங்கம் எதற்கு சம்மதிக்கின்றதோ அதனையே அரசியல் தீர்வாக சர்வதேசம் கருதும் என்பது கண்கூடு. ஆகவே மாகாண சபை முறையை தமிழர்கள் ஏற்றுக் கொண்டால் அதுதான் சர்வதேசத்தின் தீர்வாக அமையும். ஆகவே தமிழத்தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் சிலர் சர்வதேசத்தின் நிலைப்பாடு என்று சொல்வது எதனை? ஜனாதிபதி முன்னிலையிலான பதவிப்பிரமாணம் எதனைக் காட்டுகின்றது?
GTN-
















