தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைத்து செயற்பட்டால் மட்டுமே வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி முதலமைச்சருடன் கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதி. என்னுடைய பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன்.
எனவே உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒன்றானவே முன்னெடுக்கப்படும். ஆனால், அந்தந்த உதவிகள் உரியவர்களுக்கும் உரிய பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துடன் சுமூகமாக நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்துகொள்ளுமானால் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமைபோல் சுமூகமாக நடைபெறும்” என ஜனாதிபதி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பதவியேற்றபின்னர் விக்கினேஸ்வரனுக்கு மரத்தினால் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை ஒன்றினையும் ஜனாதிபதி பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















