1997ஆம் ஆண்டிலிருந்து விரிவு பெற்ற புதுக்குடியிருப்பு சிறுநகர எல்லை அந்தக் காட்டுக்குறையனோடு அரண் பெற்றுக் கொண்டது. அதாவது அது கழித்துவிடப்பட்ட காட்டுப்பகுதி.
அப்படியென்றால் யாரும் கவனத்திலெடுக்காத காடு என அர்த்தப்படும். ஒரு பக்கம் புதுக்குடியிருப்பின் வேணாவில் கிராமமும், மறுமுனையில் ஒட்டுசுட்டானுக்கு செல்லும் வீதியும் அந்த சிறுகாட்டுத் துண்டுக்கு கூரியவாள் வடிவம் கொடுத்திருந்தது. இரு பக்கங்களாலும் அந்தக் காட்டுக்குள் நகரும் மக்கள் அதனை அரித்து எடுத்தனர்.
அதாவது மெல்லிதாக நீண்டு வளரும் மரங்கள், அக்கால குடிசை வீடுகளுக்கு அவசியப்பட்டது. வரிச்சித் தடிகளுக்கு பிரபலம் பெற்ற இடமாக அந்தத் துண்டுக் காடு விளங்கியது.
ஆனால் 1999ஆம் ஆண்டோடு அதற்குள் பொதுமக்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்டுப் பகுதிக்குள் பொது மக்கள் உள்நுழையத் தடை என்கின்ற பெயர்ப் பலகைகள் காட்டு மரங்களில் பலமாக அறையப்பட்டிருந்தன.
கழித்துவிடப்பட்ட காடு
அந்த ஆண்டிலிருந்து கழித்துவிடப்பட்ட காடு மர்மம் நிறைந்ததாக மாறியது. பகலில் எந்த ஆள் நடமாட்டத்தையும் அங்கு அவதானிக்க முடியாது. நள்ளிரவானதும் வாகன இரைச்சலினால் அயல் கிராமங்களே அதிரும்.
கிரவல் மண் அதிகளவில் காட்டின் உள்ளே எடுத்துச் செல்லப்படுவதாக ஒரு தரப்பினரும், வெளியே எடுத்து வரப்படுவதாக இன்னொரு தரப்பினருமாக புதுக்குடியிருப்பு சந்திக் குடிமகன்கள் வாதிட்டுக்கொண்டனர்.
ஆனாலும் யாரும் அதனை ஆழமாக தேடிக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. காரணம் அப்போது ஒட்டுசுட்டான் வீதி அச்சுறுத்தல் மிகுந்ததாக மாறியிருந்தது. இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் படையணி அந்த வீதியில்தான் தன் வீரத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.
குறித்த ஆண்டிலேயே, புதுக்குடியிருப்புக்கு மிக அருகான பகுதியில் கிளைமோர் தாக்குதலொன்றில் கேணல் சங்கர் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு கழித்துவிடப்பட்ட காட்டுப் பகுதியிலிருந்து எந்த இரைச்சலும் வரவில்லை. அமைதியானது காடு.
காட்டுக்குள் வீடு
காட்டின் அமைதி நிரந்தரமானது. தொடர்ந்து சமாதானம் அடித்ததால் எந்த பரபரப்பையும் அந்தக் காட்டை அண்மித்த பகுதியில் அவதானிக்க முடியவில்லை.
ஆனால் ஆயுதமற்ற நிலையில் எவ்வேளையிலும் போராளிகளை அங்கு அவதானிக்கலாம். அருகருகாக போராளிகளுக்கான முகாம்கள் முளைத்தன. காட்டுக்குள் இருந்த போராளிகள் நாட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கின்றனர் என மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆனாலும் அந்த மர்மம் கிடப்பில் போடப்பட்டிருந்து. 2009ஆம் ஆண்டில் புலிகள் மெளனித்த பின்னர் உடையத் தொடங்கிய மர்மங்களுள் கழித்துவிடப்பட்ட காடு முதன்மையிடத்துக்கு வந்தது.
போரை ஒளி பரப்பிய தொலைக்காட்சியில் தோன்றிய இராணுவத்தினன் மீண்டும் மீண்டும் அந்த காட்டையே காட்டினான். அதற்குள் இருக்கும் சிறு வீட்டையும், அதற்கு கீழான நில அறைகளையும், பிரபாகரன் வாழ்ந்தமைக்கான தடயங்களையும் மீள மீள விவரணப்படுத்திக் கொண்டிருந்தான்.
பிரபாகர நினைவை மீளுற்பத்தி செய்யுமிடம்
சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஆவென வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பெரும் ஆச்சரியக் கிடங்காக அதையுணர்ந்தனர். அரச ஊடகங்கள் பிரபாகரனின் சொகுசுத்தனமாக அதனைக் காட்டி அவர் மீதான பிம்பக் குலைவை ஏற்படுத்த முயற்சித்தன.
உடனடியாகவே போர் சுற்றுலாவையும் இராணுவத்தினர் ஆரம்பித்திருந்தனர். அந்தக் காட்டுக்குள் நுழைவதற்காக மக்கள் முண்டியடித்தனர். ஒரு பெரும் யுக முடிவில் தோற்கடிக்கப்பட்ட வீரனின் தூய சமாதியைப் பார்க்கும் அனுபவத்தை அங்கு வருபவர்கள் பெற்றுச்சென்றனர்.
பிரபாகர நினைவை மீளுற்பத்தி செய்யுமிடமாக அதைக் கருதினர். அந்தக் கட்டுமானத்தை தொட்டுணர்ந்து தம் இனப் பெருமையை இரு தரப்பினருமே பேசிக் கொண்டனர். தெற்கிலிருந்து வந்தவர்கள் தோற்றுப்போன இனத்தின் மீது ஏளனத்தையும், அதிகாரத்தையும் கூட அந்த விடத்தில்தான் வெளிப்படுத்தினர்.
ஏன் தகர்த்தார் வீட்டை?
ஆனாலும் இவை எதற்கும் நீடிப்பு கிடைக்கவில்லை. நடந்து முடிந்த பொறுக்கித்தனமிக்க தேர்தலுக்கு பிரபாரகனும், மாவீரர்களும் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
பிரபாகரன் மாவீரனாக ஒளிவீசியிருந்தார். மாவீரர் துயிலுமில்லங்கள் மறுபடியும் தேவையயன்ற முழங்கங்கள் வடக்கின் எட்டுத்திக்கும் ஓங்கியயாலித்தன. அரசியலில் அப்பாவிகளான மக்கள் மீண்டும் இந்தக் குரல்களுக்குப் பின்னால் இழுபட்டனர்.
தியாக அலைகளுக்குப் பின்னால் அடித்துச் செல்லப்பட்டனர். வீரப் பெருக்கில் நனைந்தனர். எல்லாவற்றையும் இராணுவம் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் அடுத்த போருக்குத் திட்டமிட்டனர்.
இது ஒருவித உளவியல் போர். பிரபாகரனையும், மாவீரர்களையும் மன நினைவைவிட்டு அழிக்கும் போர். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முடிவு பெற்றிருந்தாலும், பிரபாகரன் வாழ்ந்த இடம், போராட்டத்திற்கான உணர்வை கொடுப்பதாக அனைவரும் உணர்ந்தனர்.
அதற்காக, இதுவரை இராணுவ வெற்றியின் உச்சமாக விளங்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பிரபாகரனின் வீட்டையும் கடந்த 3ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் தகர்த்தெறிந்தனர்.
வியக்க வைத்த கட்டுமானம்
இஸ்ரேலிய புலனாய்வுத் துறையான மொசாட்டின் கட்டுமாணப் பணிக்கு ஒப்பானதாக இந்த வீட்டை சிலர் அடையாளப்படுத்தியிருக்கின்றனர்.
அது எவ்வளவு புகழ் மிக்கதாகவும், நுட்பமிக்கதாகவும் இருப்பினும், புலிகளின் இராணுவத் தந்திரோபாயங்களுக்கும், பிரபாகரன் இயற்கை மீது கொண்டிருந்த பேரறிவுக்கும் இந்த வீடு சிறந்த உதாரணம். வீடு அமைக்கட்டிருக்கும் பகுதியை நூலிலைக் காடு என்றே குறிப்பிடலாம்.
அதாவது மிகுந்த நெருக்கமிக்கது. மெல்லிய கொடிகளும், செடிகளும், இடையிடையே வைரமிக்க மரங்களும் நிறைந்தது. எவராலும் இலகுவில் உள்நுழைந்துவிட முடியாதது. ஒரு பெரும் யுக முடிவில் தோற்கடிக்கப்பட்ட வீரனின் தூய சமாதியைப் பார்க்கும் அனுபவத்தை அங்கு வருபவர்கள் பெற்றுச்சென்றனர்.
















