வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு அநேகமாக நிரந்தரமாக ஒருவீடு இருந்ததில்லை. இடப் பெயர்வுகளால் அடிக்கடி வீடுகள் மாறிப் போக ஒருகட்டத்தில் வீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. வீடு அழிக்கப்பட்டு வீட்டை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடு ஒன்றைப் பற்றிய கனவோடு கடந்த பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். புல் வெளிகளும் காடுகளும் மரங்களும் பதுங்கு குழிகளும்தான் எமது வீடுகளாக இருந்திருக்கின்றன. நாளுக்கொரு வீடு காலத்திற்கு காலம் பலவீடுகள் வீட்டுக் கொரு பதுங்குகுழி, ஆளுக்கொரு பதுங்கு குழி என்றுதான் எங்கள் வாழ்க்கை கழிந்திருக்கிறது. எல்லாப் படையெடுப்புக்களும் எங்கள் வீடுகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கின. மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட எல்லா வீடுகளும் மீண்டும் மீண்டும் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் பதுங்கு குழிகளை வெட்டினோம். ஒரு பதுங்குகுழி மூடுண்டு போகும் காலத்தில் மீண்டுமொரு பதுங்கு குழி வெட்டிக் கொண்டோம்.
வீட்டை விட்டு பதுங்கு குழி பின்னர் அதனையும் இழந்து வெறும் வெளிக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். வீட்டை அழித்தல் என்பது வாழ்வை அழித்தல், சுவடுகளை அழித்தல், வரலாற்றை அழித்தல் என்று கனவுகளை நிர்மூலமாகக்கும் அழிப்பு நடவடிக்கையாகவே நிகழ்த்தப்படுகின்றன. இதுநாள் வரையில் நடந்த ஈழப்போரில் படையெடுப்பகளால் பலலட்சம் வீடுகள் அழிந்தன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் அபகரிக்கப்பட்டன. யாரும் திரும்பாத வீடுகள் இன்னமும் இருளும் சூன்யமும் வெறுமையும் நிரம்ப அழிந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரில் பலலட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன. 2009இற்குப் பின்னர் எஞ்சியிருந்த சில வீடுகளில் பிரபாகரன் வசித்ததாகச் சொல்லப்படும் வீடும் ஒன்று. அதை வீடுஎன்பதை விடவும் ஒரு பதுங்கு குழி என்கிற வித்திலேயே அமைந்திருக்கிறது.
பிரபாகரன் பிறந்தவீடு
யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீடு இருந்தது. ஒருநாள் எனது நண்பன் ஒருவனுடன் வடமராட்சிக்குச் சென்ற பொழுது அவன் பிரபாகரனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்பொழுது அந்த வீடு ஒருவியப்பூட்டும் வீடாக சிங்களமக்களால் பார்வையிடப்பட்டது. பிரபாகரனின் வீடு எங்கிருக்கிறது? என்றும் அதைப் பார்க்கவேண்டும் என்றும் முதலில் படை எடுத்தது சிங்கள மக்கள்தான். போர் முடிந்தபின்னர் நாள் தோறும் வடக்கிற்குப் படையெடுக்கும் சிங்களமக்கள் பிரபாகரன் பிறந்தவீட்டைப் பார்க்க திரண்டு கொண்டிருந்தார்கள். ஒருயுகத்தின் முடிவில் அக்காலத்தின் போர் வீரன் ஒருவன் பிறந்தவீட்டைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் அவர்களிடம் மிகுந்திருந்தது.
பழையதொரு எளிமையான வீடு. நீண்டநாட்கள் ஆட்கள் வசிக்காதிருந்தது. முற்றத்து மரங்கள், கிணற்றடி என்று எல்லாம் ஆட்களின் வாசம் படாமல் தூசு படிந்திருந்தது. சிங்களமக்கள் அந்த வீட்டை ஒரு அதிசயமாக பார்த்ததுடன் பின்னர் பக்தி நிலைக்கும் வந்தார்கள். அந்த வீடுபிரபாகரன் குறித்த சித்திரத்தை அவர்களுக்கு உணர்த்தி இருக்கவேண்டும். அந்த வீட்டிலிருந்து வருபவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்துச் சென்றார்கள். அந்தவீட்டின் முன்பாக படம் பிடித்துக் கொண்டார்கள். சிங்கள மக்கள் அந்த இடத்திற்கு நாளும் பொழுதும் திரள்வதால் அந்த இடத்திற்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுத்தார்கள். துப்பாக்கி ஏந்திய இராணுவத்திரால்; பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட அந்த வீடு ஒருநாள் தரைமட்டமாக அழிக்கப்பட்டது. பிரபாகரனின் தயார் காலமாகிய நாளுக்கு சிலநாட்கள் முன்பாக அந்த வீடு தரையோடு சாய்க்கப்பட்டிருந்தது.
பிரபாகனின் வீடு எங்கிருந்தது?
அண்மையில் வன்னியில் புதுக்குடியிருப்பில் பிரபாகரனின் வீடு என்று இலங்கை அரசாங்கம் காட்டிவந்த வீடுதகர்த்து அழித்திருக்கிறது. பாரிய பதுங்கு குழிஒன்றைக் கொண்ட அந்த வீடு மூன்று மாடிகளால் ஆனது. விடுதலைப் புலிகளின் அடையாளங்கள் இனியும் தேவையில்லை என்றே அந்த வீட்டை தகர்த்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். வீடுகளை தகர்ப்பதில் பெயர் போன இலங்கை இராணுவத்தினர் பிரபாகரனின் வீடு என்ற பெயரில் அந்தவீட்டையும் அழித்துவிட்டனர். வன்னியில் பலவீடுகளின் புலிகளின் வீடுகள் புலிகளின் காணிகள் என்று சில காணிகளையும் வீடுகளையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். ஆனால் அந்தவீடுகள் மக்களினுடயவை. புலிகள் தங்கியிருந்தார்கள் என்பதற்காக அவற்றை இராணுவத்தினர் தற்பொழுது அனுபவித்து மக்களை தெருவில் விட்டுள்ளனர்.
வன்னிப் போர் நடந்து கொண்டிருந்த பொழுது சில இடங்களைக் கைப்பற்றிய பொழுதும் பிரபாகரனின் வீடு என்றும் பிரபாகரனின் பதுங்கு குழி என்றும் இராணுவத்தினர் தொலைக்காட்சியில் அடையாளம் காட்டினர். பிரபாகரன் சொகுசான வீடொன்றில் வாழ்ந்தார் என்றும் அவர் வாழ்ந்த இடங்களில் மதுப்போத்தல்கள் எல்லாம் இருந்தன என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது பிரபாரகனின் வீடு ஒன்றைக் கைப்பற்றியதாக காட்ட வேண்டிய தேவை இராணுவத்திற்கிருந்தது. அவரது வீட்டில் மதுப்போத்தல்கள் கிடந்தன என்றும் சொல்ல விரும்பினார்கள். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலுள்ள ஒரு வீட்டை பிரபாகரனின் குடும்பத்தினர் வாழ்ந்த வீடு என்றும் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
கொரில்லாக்களின் பதுங்கு குழி
கிளிநொச்சி நகரில் புலிகளால் வீழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கிக்குள் பிரபாகரன் பதுங்கியிருந்தார் என அதை ஒரு கண்காட்சிப் பொருளாக மாற்றியிருந்தனர். அதைப் போலவே தற்பொழுது அழிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக் குடியிருப்பில் உள்ள பதுங்குழியுடன் அமைந்த அந்த வீட்டையும் இராணுவத்தினர் கண்காட்சிப் பொருளாக மாற்றினர். தமது வெற்றியை களிப்பூட்டும் விடயமாக சிங்கள மக்களுக்கு காட்டுவதற்காக அதைமக்கள் பார்வையிடும் சுற்றுலாத் தளமாக அறிவித்தார்கள். இதனால் நாளும் பொழுதும் இங்கும் மக்கள் குவியத் தொடங்கினார்கள். இறுதியுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு வரும்பொழுதெல்லாம் சிங்களமக்கள் தவறாமல் இந்தவீட்டைப் பார்த்துச் சென்றனர்.
குறித்தவீட்டின் கீழ் உள்ள பதுங்குகுழியின் அமைப்பை வைத்து அதன் உருவாக்கம் மிகவும் நுட்பமும் பாதுகாப்பும் கொண்டதொரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. அந்த வீடு அமைந்துள்ளமண், சூழவுள்ள காடுகளின் தன்மை, வன்னியில் குறித்த இடத்தின் அமைவு முதலியவற்றைப் வைத்துப் பார்க்கையில் முக்கியமானதொரு பதுங்கு குழியாகவே உள்ளது. கொரில்லாப் போராளிகளின் பாதுகாப்பு மிக்க பதுங்கு குழி என்று சொல்லப்படுகின்றது. புலிகளின் முகாங்கள், பயிற்சிப் பாசறைகள் மட்டுமன்றி அன்றைய காலத்தில் மக்களின் வீடுகள் பலவும் பாதுகாப்பான பதுங்கு குழிகளுடன்தான் இருந்தது. சமாதான காலத்தில் வன்னிக்கு அனுமதிக்கப்பட்ட சீமெந்தினால் பலர் பாதுகாப்பான பதுங்கு குழிகளை நிர்மாணித்தனர்.
பிரபாகரனின் முகவரி
பிரபாகரன் எங்குவசித்தார் என்று அறிந்தவர்கள் ஒருசிலரே. ஆனாலும் ஒருகொரில்லாப் போராளி ஒருவீட்டில் வசிக்கக் கூடியவராகவும் அவரது வசிப்பிடம் என்பது ஒருவீடாக இருக்கும் என்றும் குறிப்பிடமுடியாது. 2009இற்கு முன்னரான காலத்தில் ஓமந்தைச் சோதனைச் சாவடியின் ஊடாகவும் முகமாலை சோதனைச் சாவடியின் ஊடாகவும் பயணிக்கும் வன்னிமக்களை இராணுவப் புலனாய்வார்கள் பிரபாகரனின் வீட்டைக் கண்டு பிடிப்பது தொடர்பில் தீவிரமாக விசாரித்தார்கள். வரிசையில் மேசை கதிரை போட்டு, வரும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து வன்னியில் எங்கு என்ன இருக்கிறது என்று கேட்டபார்கள். அத்துடன் முக்கியமாக பிரபாரகன் வசிக்கும் வீடுதெரியுமா? என்றும் கட்டாயமாகக் கேட்பார்கள். இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனிடமும் அவர்கள் பிரபாகரனின் இருப்பிடத்தை கேட்டு சித்திரவதை செயதுள்ளனர்.
அன்றையகாலத்தில் பிரபாகரனுக்கு மக்கள் அறிய ஒருமுகவரி இருந்தது. அது: மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், தேசியத் தலைவர், தலைமைச ;செயலகம், தமிழீழம். இந்த முகவரிக்கு அன்று பலர் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்திற்கு பதில்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் பிரபாகரன் எங்கிருக்கிறார்? அவரது வீடுஎங்குள்ளது? அவருக்கு ஒருவீடு இருந்ததுதானா? என்றெல்லாம் அன்றுமக்கள் சிந்தித்தது இல்லை. வன்னியில் இருக்கிறார் என்று தெரியும். அதைத்தாண்டி பிரபாகரனின் வீடு எங்கிருக்கிறது என்றுவன்னியில் மக்கள் ஆராய்ந்ததும் இல்லை.
நினைவும் அரசியலும்
நினைவுகளையும் தடயங்களையும் அழிப்பது ஆக்கிரமிப்பளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகள். அதன் மூலம் அரசியல் ரீதியான, பண்பாட்டுரீதியான, வரலாற்றுரீதியான அழிப்பொன்றை அவர்கள் நிகழ்த்துகின்றார்கள். கடந்தகாலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள், போராளிகளின் நினைவுத்தூபிகள், சிலைகள் எனபலவற்றை இராணுவத்தினர் அழித்துள்ளனர். அந்தக் கல்லறைகளும் நினைவுத்தூபிகளும் சிலைகளும் தமதுபிள்ளைகள் உறவுகள் எனநினைவு கூர்ந்தமக்களின் தீராதசாபத்திற்கு இராணுவமும் அரசும் உள்ளாகியுள்ளது. இப்பொழுது பிரபாகரனின் வீடு எனக் காட்டப்பட்டு ஒருவீட்டை இராணுவத்தினர் அழித்துள்ளதன் மூலம் இன்னமும் தீராத சாபத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமது அரசுக்காக கடுமையாக உழைத்த இராணுவத்தினர் அத் தேர்தலில் தோல்வியடைந்தனர். அந்ததோல்வியின் வெளிப்பாடாகவும் புலிகளின் அடையாளங்கள் தொடர்ந்து கொண்டாடப்படுவதற்கு எதிராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரன் குறித்தும் புலிகள் குறித்தும் நாள் தோறும் சிங்கள இனவாத தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சின்னங்களை இராணுவத்தினர் அழித்தல் என்பது சிங்கள இனவாத உளவியலில் உள்ளபயமே இவ்வாறு வெளிப்படுகின்றது.
ஒரு போராளியின் வாழ்க்கையில் இயல்பான வீடு ஒன்று இருக்க சாத்தியமில்லை. போராளிகள் வீடுகளை விட்டு களத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதில்லை. ஆனாலும் அவர்களுக்காக பலவீடுகள் திறந்தேயிருந்தன. எல்லாவீடுகளும் அவர்களுடைய வீடுகளாயிருந்தன. பிரபாகரனின் இருப்பிடம் நிரந்தரமாக இருந்தததில்லை என்றும் அது காலத்திற்கு காலம் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது என்றும் போராளிகள் குறிப்பிடுகின்றார்கள். வன்னிப் பெருங்காடுகள்தான் பிரபாகரன் வசித்தவீடுகள். அவைதான் அவரது பதுங்குகுழிகள். பல்வேறு வாதப் பிரதிவாதங்கள், விமர்சனங்களுக்கு அப்பால், விரும்பியோ விரும்பாமலோ லட்சக்கணக்கான மக்களின் மன வீடுகளில் பிரபாகரனும், தாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியத்திற்காக உயிர் துறந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் வசித்தனர், வசித்துக்கொண்டு இருக்கின்றனர்.அந்த மன வீடுகளை அடையாளம் காணவும் முடியாது. அழிக்கவும் முடியாது.
தற்பொழுது அழிக்கப்பட்டது பிரபாகரன் வாழ்ந்த வீடுகளில் நிலத்தின் கீழாக அமைந்த 3 அடுக்கு வீடுதான் அது கற்களாலும், சீமெந்தினாலும் தளபாடங்களினாலும் ஆன ஒரு வீடுதான். அந்த வீட்டை அல்லது பிரபாகரன் பிறந்து, வாழ்ந்த வல்வெட்டித்துறை வீட்டை, அல்லது பிரபாகரன் நடமாடிய, வாழ்ந்த வீடுகள் என அடையாளப்படுத்தி இன்னும் பல வீடுகளை இராணுவத்தினர் அழிக்கலாம். மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கலாம், இன்னும் புலிகளின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் தேடி அழிக்கலாம். ஆனாலும் இந்த நூற்றாண்டில் வாழும் லட்சக்கணக்கான தமிழ்மக்களின் மனவீடுகளில் இருந்து பிரபாகரனினதும்,விடுதலைப் போரில் உயிர் நீத்த ஆயிரமாயிரம் போராளிகளினதும் அந்த நினைவுகளை அழிக்க முடியுமா?
-GTN, பார்த்தீபன்
















