தமிழகத்தில் 50 லட்சம் ஏழைகள் உள்ளதாக தமிழக அரசின் புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சென்னையில் நேற்று நடந்த தேசிய அளவிலான மக்கள் நிலை ஆய்வு கருத்தரங்கில் இத்தகவல் வெளியிடப்பட்டது
2005ல் கணக்கெடுப்பு: ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அரசின் திட்டங்களைப் பெறக் கூடியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு 2005ல் துவங்கியது.
70 வட்டாரங்களில் முன்னோட்டமாகத் துவங்கப்பட்ட இப்பணி தற்போது 26 மாவட்டங்களில் உள்ள 5,000 கிராமங்களில் முடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து 17 மாநில முதன்மைச் செயலர்கள் இம்மாதம் 5ம் திகதி முதல் மூன்று நாட்கள் கிராமங்களுக்கு சென்று தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பு குறித்து நேரடியாகப் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து தேசிய கருத்தரங்கம் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. இதில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலர் விஜயகுமார் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் தமிழக ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் உதவி திட்ட இயக்குனர் சஜீவனா ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தின் கிராமங்களில் உள்ள மக்கள் தொகையில் ஏழைகள் எவ்வளவு பேர் என்ற கணக்கெடுப்பை மேற்கொண்டோம். விதவைகள், ஆதரவற்றவர்கள், அதிக குழந்தைகள் உள்ள குடும்பம், திருநங்கைகள், இரந்து வாழ்வோர் என 18 வகையான காரணிகளை இக்கணக்கெடுப்பில் பின்பற்றினோம்.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் 10 லட்சம் ஏழை குடும்பங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம். ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஐந்து பேர் என்ற அடிப்படையில் 50 லட்சம் ஏழைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மாநிலத்தின் எஞ்சிய பிற கிராமங்களிலும், இக்கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறோம். இப்புள்ளி விவரமும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பற்றிய புள்ளி விவரமும் வேறுபடுகிறது.
இவற்றுக்கு இடையேயான வேறுபாடு 12 சதவீதம் இருக்கும் என கருதுகிறோம். ஏழைகளைக் கண்டறிய தமிழகத்தில் பின்பற்றிய அணுகுமுறையை, நாடு முழுவதும் பின்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
















