வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமானம் செய்து கொண்டதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்துள்ளார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
சர்வதேச சமூகமும் சில தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்க மாட்டார் என்ற எண்ணத்திலேயே இருந்தனர்.
இருப்பினும் தமது சாணக்கியமான அணுகுமுறையினால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மூலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து அதன் மூலம் தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது நாட்டிலுள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளி மக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்வது என்பது அரசாங்கத்திடம் மண்டியிடுவதோ உரிமைகளை விட்டுக் கொடுப்பதோ அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களும் அதே போல் தமிழ் நாட்டிலுள்ள வை.கோபால்சாமி போன்ற தலைவர்களும் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்கள். இன்று நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் யதார்த்த நிலைமைகள் இவர்களுக்கு விளங்குவதில்லை.
தமது சொந்த நலன்களுக்காகவே இவர்கள் செயல்படுகின்றார்கள். இந்திய அரசியல்வாதிகள் தங்களது சுய அரசியல் விளம்பரங்களுக்காகவே பேசி வருகின்றார். தென்னிலங்கையில் சிங்கள மக்களோடு வாழும் தமிழ் மக்களைப் பற்றி எந்த அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழ் கூட்டமைப்பின் இந்த முடிவின் மூலமாக சிங்கள மக்கள் மத்தியிலே இன்று பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மாகாணசபைகளுக்குரிய கொடுக்கப்படாத ஏனைய அதிகாரங்களைக் கூட வழங்கினால் தவறில்லை என்ற மனநிலை இதன் மூலம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இவ்வாறான இராஜததந்திர செயல்பாடுகள் எதிர்காலத்தில் தொடர வேண்டுமென்றே நான் எதிர்ப்பார்க்கின்றேன்.
தமிழ் கூட்டமைப்பின் இந்த செயல்பாட்டினால் எமது அரசாங்கம் தான் தடுமாறிப் போயுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை கொண்டு வரவேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் வட மாகாண அபிவிருத்திக்கு முழுமையான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. சி.;வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதும் ஊடகங்களுக்கு தனது ஒரே நாடு பறிபோய்விடும் என்ற பயம் சிங்கள மக்களுக்கு ஏற்பட்டிருப்பது யதார்த்தமான விடயம் என்று குறிப்பிட்டது அவரது முற்போக்கு சிந்தனையை காட்டுகின்றது
இது போன்ற நல்லிணக்க பேச்சுக்கள் மூலம் எமது இழந்த உரிமைகளை படிபடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அடிக்கடி கூறி வருவதைப் போல தமிழ் மக்களுக்கான உரிமைகளை சிங்கள அரசாங்ககங்களிடமிருந்து பெறுவது பிரயோஜனமானதல்ல. மாறாக சிங்கள மக்கள் மத்தியில் எமது தமிழ் சகோதரங்களுக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டால்தான் அது நிஜமான இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு வழிவகுக்கும்.
இன்றைய வடமாகாண முதலமைச்சரின் செயல்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. இப்படியான செயல்பாடுகளை நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு மனதுடன் பாராட்ட வேண்டும்.
















