விமானத்தில் பயணிப்பதற்கு பயந்து டுபாயில் 18 மாதங்களாக தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன் ஹிப்னோடிஸம் சிகிச்சை மூலம் நாடு திரும்பியுள்ளான்.
ஏரோபோபியா எனும் அச்சம் தொடர்பிலான குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோ தொம்ஸன் என்ற 12 வயதான சிறுவனே இவ்வாறு 18 மாதங்களுக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளான்.
4 வருடங்களுக்கு முன்னர் தொம்ஸனின் தந்தை டொனி வேலை காரணமாக டுபாய்க்கு குடும்பத்துடன் சென்றார். அதன்பின் 2012 ஜுன் மாதம் மீண்டும் நாடு திரும்ப முற்பட்ட போது தொம்ஸன் விமானத்தில் ஏறுவதற்குப் பயந்தான்.
4 தடவைகள் விமானத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. கப்பல் மூலம் பயணம் செய்யவும் அவன் மறுத்தான். ஆனால் இவனது தாயும் சகோதரியும் தமது தொழிலை கவனிப்பதற்காக இங்கிலாந்து சென்றுவிட்டனர்.
இதனால் மகனுடன் டுபாயில் 18 மாதங்களாக தங்கியிருந்துள்ளார் டொனி. இதற்காக பெருந்தொகை பணத்தை அவர் செலவிட்டு வங்குரோத்தாகும் நெருக்கடியை எதிர்நோக்கினார்.
















