மஹிந்தவுக்குத் தலையசைத்து குர்ஷித் தமிழருக்கு துரோகம்

ramadasஅதிகாரப் பகிர்வுக்கு இலங்கையைப் பணிய வைக்காமல் ராஜபக்­ஷ கூறியதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார் குர்ஷித். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் இறையாண்மைக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார் என பா.ம.க. நிறுவுநர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தரும் என்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.” என்றும் ராமதாஸ் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை அரசு போரை நடத்தியபோது அதை முடிவுக்கு கொண்டுவந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்தியது.

ஜனாதிபதி மஹிந்த போர் முடிந்து 6 மாதங்களில் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆயினும் போர் முடிந்து நான் கரை வருடங்கள் முடிந்துள்ள போதும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையிலும், காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அவமதிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறானதொரு நிலையில், இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மஹிந்தவை எச்சரித்து 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்தச் சம்மதிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்தபோது அவர் எதனையும் வலியுறுத்தவில்லை. மாறாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே முடிவெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்ததற்குத் தலையசைத்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நேரடியாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையை குர்ஷித் பணிய வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ ராஜபக்­ஷ கூறியதற்குத் தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்.

இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவின் இறையாண்மைக்கும் குர்ஷித் துரோகமிழைத்திருக்கின்றார். தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத சல்மான் குர்ஷித்துக்கும் மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Tags: , ,

Leave a Reply