மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் தகர்க்கப்படும்: மிரட்டல் விடுத்த வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு!

மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் தகர்க்கப்படும் என்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பணிகள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகம் எதிரே காட்சி தரும் கலங்கரை விளக்கத்தை வாலிபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகர்க்கப்படும் என புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
    
சமூக வலைத்தளம் என்பதால் இந்த பதிவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுகுறித்து கடல்வழி அமைச்சரகத்தில் இருந்து அதிகாரிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படத்துடன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து எஸ்ஐ தலைமையில் 6 போலீசார் கலங்கரை விளக்கம் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதி முழுவதும் ரோந்து வாகனம் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் காணப்பட்டால் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெரினா போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர். மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் சைபர் க்ரைம் போலீசார் முடக்கியுள்ளனர். க்யூ பிரிவு போலீசாரும் மெரினா போலீசாருடன் இணைந்து குற்றவாளியை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!