மீனவர் கைது விவகாரம்: இந்தியாவும் பதிலடி; தூத்துக்குடியில் 26 இலங்கையர்கள் நேற்று இந்தியக் கடற்படையால் கைது

arrestதமது மீனவர்கள் மீதான அத்துமீறல்களை நிறுத்துமாறு இலங்கையிடம் தொடர்ச்சியாக கோரி வந்த இந்தியா, தனது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததையடுத்து அதற்குப் பதிலடியான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக புதுடில்லி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இதன் ஒரு அங்கமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் 26பேரை தூத்துக்குடி கடலோரக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த நான்கு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று இரவு தெரிவித்தன.

இந்திய மீனவர்கள் மீதான கெடுபிடியை இலங்கைக் கடற்படை நிறுத்திக் கொள்ளாததை அடுத்தே இந்தியா இந்தப் பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டின.

இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தற்போது பெரும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவுவதாகக் கூறி இந்திய மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அண்மை நாள்களாகக் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு கோரித் தமிழகத்தில் உள்ள மீனவர் அமைப்புக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. ஆயினும் இந்தப் போராட்டங்களுக்கு பலன் ஏதும் கிட்டவில்லை.

இதனால் விசனமடைந்த தமிழக மீனவர் அமைப்புகள் இந்திய மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தன. மீனவர் பிரச்சினை இவ்வாறு மோசமாகி வருவதையடுத்து இந்தியாவும் தனது பதில் நடவடிக்கையை இப்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையிலேயே 26 இலங்கை மீனவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டு தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுவடைந்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இதேவேளை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தியா, இலங்கை மீனவர்கள் 26 பேரை கைது செய்துள்ளதாக தென்னிலங்கை மீனவர் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Tags: , , , ,

Leave a Reply