மிகப்பெரும் அமைச்சர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு, நேற்று மேலும் ஒன்பது பேருக்குப் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளது.
அரசின் மிக நெருங்கிய விசுவாசிகளுக்கு இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தெங்கு அபிவிருத்தித் துறைக்கும் பிரதியமைச்சரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மஹிந்தவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவு செய்துள்ளது. அதன் இணையத் தளத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தலைமை யில் அவரது செயலகத்தில் நடை பெற்றது. தபால் சேவைகள் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சனத்ஜெயசூரிய, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிலிருந்து விலகிய சனத் ஜயசூரிய கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் அரச சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு பிரதியமைச்சரொருவர் இருக்கின்ற நிலையில், மேலும் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் வசந்த பெரேராவுக்கு அத்துறையில் பிரதியமைச்சுப் பதவியயான்று வழங்கப் பட்டுள்ளது.
அத்துடன், வை.ஜீ.பத்மசிறி எம்.பி. விவசாயத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சராக சரத்வீரசேகரவும், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராக விக்டர் பெரேராவும் பதவியேற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச பக்கம் தாவிய மொஹான்லால் கிரேருக்கு பிரதி கல்வியமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக நிஷாந்த முத்துயஹட்டிகமவும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சரத் முத்து குமாரணவும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வணிகத் துறை பிரதியமைச்சராக ஹேமால் குணசேகரவும் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நேற்றைய பிரதியமைச்சு நியமனத்தின்போது கூட்டணி அரசிலுள்ள சிறுபான்மை இன எம். பிக்கள் எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை.
மேலும் சிலருக்கு பதவிகள்
எனினும், அடுத்தவாரத்துக்குள் மேலும் சில எம்.பிக்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும், அதில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்றும் அரச வட்டாரங் களிலிருந்து அறியமுடிகின்றது.
திகாம்பரம் எம்.பிக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியயான்றை வழங்குவது குறித்து தற்போது பேச்சுகள் இடம் பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
















