கடந்த 2012ஆம் ஆண்டு உலக அழகியாக (மிஸ் யூனிவர்ஸ்) தெரிவுசெய்யப்பட்ட ஒலிவியா கல்போ இந்திய சுற்று பயணத்தின்போது, தாஜ்மஹாலின் விதியை மீறியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 21 வயதாகும் அவர் இந்தியாவிற்கு 10 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்றவற்றை சேவை அடிப்படையில் நாடு முழுவதும் பரப்புவதற்காக இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எனினும், யுனெஸ்கோவால் உலக பாரம்பரியமிக்க இடம் என அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மஹாலில் விதிகளை மீறி செயற்பட்டதாக இந்திய தொல்லியல் துறை அவர் மீது பொலிஸில் புகார் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு, இளவரசர் சார்ள்ஸின் மனைவி இளவரசி டயானா, தாஜ்மஹாலின் முன்புறமுள்ள பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட பெஞ்ச் மீது அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது. எனவே, அது டயானா சீட் என அழைக்கப்படுகிறது.
இந்த சீட்டில் அமர்ந்து தனது கைகளில் ஹை ஹீல்ஸ் காலணிகளில் இரண்டினை ஏந்தியபடி பின்னணியில் காதல் சின்னமான தாஜ்மகால் தெரிவது போன்று ஒலிவியாவின் புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
காலணி நிறுவனத்திற்கு விளம்பர போஸ் கொடுப்பது போன்று ஒரு கையில் காலணி ஒன்றை ஏந்தியும் மற்றொரு காலணியை அணிவது போன்றும் அவர் காட்சி கொடுத்துள்ளார்.
அவருடன் சென்றவர்கள் பை ஒன்றில் இருந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் காலணிகளை எடுத்துள்ளனர் என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியை மையமாக கொண்டு ஏ.எஸ்.ஐ. தொல்லியல் துறையினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தாஜ் மஹாலின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ விளம்பரம் செய்வதோ அல்லது விளம்பரத்தை பரப்புவதற்கான செயல் களில் இறங்குவதோ சட்டப்படி தடை செய்யப்பட்டு உள்ளது.
ஒலிவியோ மற்றும் அவருடன் சென்றவர்கள் இந்த விதிகளை மீறியுள்ளனர் என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
















