கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்கள் இன்று காலை 9.30 மணியளவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்கள்.
நடந்து முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் உறுப்பினர்களாக தெரிவானவர்கள் இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
முன்னதாக காலை 8.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் சபை உறுப்பினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் 9.30 மணியளவில் சமயதலைவர்கள், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
பின்னர் தமது நியமன பத்திரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்ட பின்னர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமது நியமன பத்திரங்களை ஒப்படைத்தனர்.
அத்துடன் மாகாண சபை அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தவர்களும் அமைச்சர்களுக்கான சத்திய பிரமாணத்தை செய்து கொண்டனர்.
அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆதரவாளர்களால் மலர்மாலை சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி கிரீடம் சூட்டப்பட்டது. அத்துடன் முதமைச்சருக்கு வெள்ளி வேல் ஒன்றும் வழங்கப்பட்டது.
















