‘வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் மக்களை கைப் பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது’
அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்ற நிலை மாற வேண்டும்.
அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுய லாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11.10.13) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது,
‘தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்பொழுதுதான் எழுந்து நிற்கப் பழகிவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் ஜனநாயக வழியில் தலைநிமிர்ந்து செல்லும் வாழ்க்கையை வாழ நாங்கள் எங்களால் முடிந்த சகலதையும் செய்வோம்.
தங்கள் தங்கள் சுய லாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக்கூடாது என்பதுடன்; ஒரு வன்முறைக் காலத்தை தாண்டி வந்துள்ளோம் என்பதையும் மறக்கவும் முடியாது. மக்களை கைப் பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை நாங்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொதுவாழ்க்கையில் எப்போதும் பொதுநலத்துடன் செயற்படவேண்டும் என்பதுடன், எமது உறவுகள் சார்ந்ததாக முடிவுகளை தான்தோன்றித் தனமாக எடுக்கக்கூடாது. எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்காமல் தலைநிமிர்ந்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட அமைச்சு பதவிகள் தொடர்பில் உறுப்பினர்கள் யாராவது வந்து கேட்டிருந்தால் அவர்களிற்கு பதில் சொல்லியிருப்பேன். இருப்பினும், அப்படி யாரும் என்னிடம் வந்து கேள்வி எதனையும் கேட்கவில்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு காரணங்கள் கூறுவதற்கு நான் தயாராக இருந்தேன்’ என்று அவர் மேலும் கூறினார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்’
‘நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்’ என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை (11) வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்தே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார்.
வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறத்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்.
இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினையே. இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்’ என்று கூறினார்.
















