தமிழகம் உட்பட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்!

நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த மூன்று மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன.
   
நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியான சுமார் 400 ஜிகா வாட்களில் 280 ஜிகா வாட் மின்சாரத்தை அனல் மின் நிலையங்கள் தயாரித்துக் கொடுக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேலானவை இறக்குமதி நிலக்கரியை நம்பியே உள்ளன.

எஞ்சிய அனல்மின் நிலையங்களுக்கு நெய்வேலி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியே ஆதாரம். 173 ஆலைகளுக்கும் ஒருநாளுக்கு 2.76 மில்லியன் டன் நிலக்கரி தேவை.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் 50 முதல் 60 டாலர் வரை இருந்தது. உக்ரைன் – ரஷ்யா போரால் தற்போது நிலக்கரி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து நமக்கு வரவேண்டிய நிலக்கரி இறக்குமதி தடைபட்டதால், விலை 160 டாலரை நெருங்கியுள்ளது. மற்றொரு புறம் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் நிலக்கரி தோண்டும் பணி கனமழையால் நிறுத்தப்பட்டது.

கொரோனா தடைகள் முடிந்து, கோடைகாலமும் தொடங்கியதால் 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிடுகிடுவென மின்சார தேவை அதிகரிக்க, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, இறக்குமதியும் குறைந்து போனதால் வரலாறு காணாத வகையில் நிலக்கரி கையிருப்பு மளமளவென சரிந்துள்ளது.

இதனாலேயே, மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய மின்சாரத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது மத்திய அரசு. இதுவே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மின்தடையால் தவிக்க முதல் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!