இராணுவத்தின் வீட்டுத்திட்டங்கள் – கிளிநொச்சியில் நடந்த மோசடி

srilanka-warகடந்த இரண்டு தினங்களின் முன்பாக இராணுவத்தினர் கிராமத்தில் உள்ள ஐந்து குடும்பத் தலைவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக அழைத்திருந்தனர். கிராமத்தில் உள்ள கணவர்களை இழந்த, வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் என கிராமம் தோறும் ஐந்து குடும்பத்தவர்களை அழைத்து வருமாறு கிராம சங்கத் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

உங்களுக்கு வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கும் விதமாக வீடுகளை அமைத்துத் தரவே அழைக்கப்படுவதாகவும் இது ஒரு வெளிநாட்டு உதவி எனவும் கிராம சங்கத் தலைவர்கள் மக்களிடம் சொல்லும்படி நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள்.

கிராமத்திற்கு ஐந்து குடும்பத் தலைவர்கள் வீதம் கிளிநொச்சியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள இலங்கை இராணுவத்தின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் உள்ளமை தொடர்பாக இறுதியிலேயே தமக்கு தெரிய வந்ததாக மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

அங்கு அழைக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் தம்மிடம் சில ‘வீட்டுத் திட்டங்கள்’ உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் வேறுவேறு விதமான வீடுகளின் படங்களை மக்களுக்கு காட்சிப் படுத்திக் காட்டினர். நீங்கள் வீடு கட்ட விரும்பினால் எங்களின் திட்டங்களின்படி வீடு கட்டலாம். அதற்காக உங்களுக்கு இந்த திட்டத்தை தருவோம் என்று இராணுவத் தரப்பு மக்களுக்குத் தெரிவித்தது.

உங்களின் பணத்தில் உங்கள் வீடுகள் என்று தெரிவித்தார்கள். மக்கள் தமது பணத்தில் வீடு கட்டினால் குறித்த திட்டங்களின் படி தாமே அந்த வீட்டைக் கட்டித் தருவோம் என்றும் அதற்கான பணத்தை மக்கள் தம்மிடம் கொடுக்க வேண்டும் எனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். இந்த விடயங்கள் யாவும் தனிச் சிங்களத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

முதலில் என்ன பேசப்படுகிறது எனத் தெரியாமல் மக்கள் இருந்தார்கள். இறுதியில் கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் எழுந்து சிங்களத்தில் இராணுவத்தினர் பேசியதை தமிழில் மக்களுக்குச் சொன்னார்கள். ஆத்திரமடைந்த மக்கள் இராணுவத்தினரை சம்பவ இடத்திலேயே வைத்து கடுமையாக பேசிவிட்டு இடத்தை விட்டுக் கலைந்தனர்.

உங்களிடம் நாங்கள் வீடு கட்டித் தரும்படி கோட்டோமா என மக்கள் கொந்தளித்துப் பேசினார்கள். நிரந்தரமான வீடுகள் இன்றி தற்காலிக குடிசைகளில் வாழும் தம்மை இராணுவத்தினர் அலைக்கழித்து அவமரியாதை செய்துள்ளதாகவும் இதற்கு கிராம சங்கத் தலைவர்கள் உடந்தையாக இருந்துள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிராமம் தோறும் ஐந்து குடும்பங்களுக்கு இராணுவ வீட்டுத் திட்டம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கவே மக்களை இராணுவத்தினர் அழைத்து வரச் சொன்னதாக கிராம சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். எனினும் இராணுவ வீட்டுத் திட்டம் என்பதை மக்களுக்கு முதலில் சொல்ல வேண்டாம் எனவும் தம்மை இராணுவத்தினர் அச்சுறுத்தியிருந்தனர் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த சில தினங்களாக வடக்கு மாகாண சபை அமைச்சுப் பதவிப் பிரச்சினைகளும் பதவிப் பிரமாணப் பிரச்சினைகளும் நடந்த சூழலில் கிளிநொச்சி நகரத்தில் தமக்கு எதிராக நடந்த இந்த மோசடி நிகழ்வு குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் வழமைபோல் தேர்தல் கால வீரவசனங்களின் பின் தாம் கைவிடப்ப்பட்டமைபோல உணர்வதாகவும் இது குறித்து செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் மக்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்கள்.

Tags: , ,

Leave a Reply