ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழரின் குடும்பத்துக்கு என்ன பதில்? – கொந்தளித்த சுமந்த் சி.ராமன்!

பேரறிவாளனை ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியதன் மூலம் ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழர்களின் குடும்பத்துக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என சுமந்த் சி. ராமன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மருத்துவர் சுமந்த் சி.ராமன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:
    
ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய ஆவணங்களையும், சாட்சியங்களையும் கோர்வையாக நீதிமன்றத்தில் ஆவணப்படுத்துவதற்காக அந்த சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இருந்து வாய்ஸ்-ஓவர் கொடுப்பதற்காக என்னை அழைத்தனர். அப்போது எனக்கு 25 வயது இருக்கும். அந்தவயதில் எனக்கு போட்டு காண்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் மிகக்கொடூரமானவை. ஒரு போட்டோவில் தலை மட்டும் இருக்கும். ஒரு போட்டோவில் உடலின் சில பகுதிகள் மட்டும் இருக்கும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆவணங்களுக்காக வாய்ஸ் ஓவர் அளித்தவன் என்ற முறையில் கூறுகிறேன். சில புகைப்படங்கள் வெளியிட முடியாத அளவுக்கு இருந்தன. கொலையாளிகள் சரியாக திட்டமிட்டு, அதற்கு முன்பாக பிரதமர் ஒருவர் பங்கேற்ற நிகழ்வில் பெல்ட் வெடிகுண்டுக்காக ‘மாதிரி சோதனை ஓட்டம்’ நடத்திப்பார்த்து அதன் பிறகே ராஜீவ் காந்தியை கொலை செய்துள்ளனர் என்பது என் எண்ணம்.

அதில் 10 வயது சிறுமி கோகுலவாணியின் கொடூர மரணம் இன்னும்மனதில் வடுவாக உள்ளது. அந்தசிறுமி காந்திஜி பற்றிய கவிதையைராஜீவ் காந்தியிடம் சொல்வதற்காக அவரது தாயாரும், காங்கிரஸாருமான லதா கண்ணன் என்பவரால் அழைத்து வரப்பட்டவர். சம்பவம்நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அந்த சிறுமியை பாராட்டிமகிழ்கிறார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியுடன் கொலையுண்டவர்களில் அவரது பாதுகாப்பு தனி அதிகாரி பிரதீப் குப்தாவை தவிர்த்து 17 வயது கல்லூரி மாணவி சரோஜா தேவி, போலீஸ் எஸ்.பி. முகமது இக்பால் என எஞ்சிய 14 பேரும் தமிழர்கள். 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் போலீஸ் அதிகாரி அனுசுயா உள்ளிட்ட 8 பேருக்கு ஏற்பட்ட கொடுங்காயத்தை அவர்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இறந்த தமிழர்களின் குடும்பங்கள் கடந்த 31 ஆண்டுகளாக ஒருவித கசப்பான துன்பத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என குரல்கொடுத்தவர்களில் நானும் ஒருவன். அவரை விடுதலை செய்ததில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரை நிரபராதி எனக்கூறி உச்ச நீதிமன்றம் விடுவிக்கவில்லை.

இந்த கொலையாளிகளை ராஜீவ்குடும்பத்தினர் வேண்டுமென்றால் மன்னிக்கலாம். ஆனால், இறந்த, காயமடைந்த தமிழர்களின் குடும்பத்தினர் அவர்களை மன்னித்து விட்டார்களா?

”பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இது பேரறிவாளனின் தாயாருக்கு கிடைத்த வெற்றி” எனக் கூறி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுமனே அறிக்கை வெளியிட்டு, அத்துடன் நிறுத்தி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேரறிவாளனை கதாநாயகர் ரேஞ்சுக்கு அழைத்துச்சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து ஆரத்தழுவி கட்டியணைத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது.

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்ற 6 பேருக்கும் பொருந்தாது. இந்தவழக்கில் பேரறிவாளனோடு, மற்ற 6 பேரையும் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் திட்டமிட்டு, இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!