2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் துவக்கம்!

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. அதன்படி மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் புறப்பட்ட பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்தின் குலனா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை நடைபெற்று வந்தது. இதனால் இருநாட்டு மக்களும் ரயில் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
    
குறிப்பாக இந்தியாவில் மருத்துவ வசதி மற்றும் சுற்றுலாவுக்காக வங்கதேசத்தில் இருந்து ஏராளமான மக்கள் ரயிலில் வந்து சென்றனர். இதேபோல் இந்திய மக்களும் அந்நாட்டுக்கு சுற்றுலா செல்ல ரயிலை பயன்படுத்தினர். இதன்மூலம் விமான பயணத்தை தாண்டி ரயில் பயணமும் இருநாட்டு மக்களையும் இணைத்தது.

இந்நிலையில் தான் 2020 மார்ச் மாதம் இருநாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததால் இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவையை துவங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்கதேசம் இடையே இன்று ரயில் சேவை துவங்கியது. கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா-குல்னா இடையே இயங்கும் பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று புறப்பட்டு சென்றது. பயணிகள் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் இன்று டாக்கா-கொல்கத்தா இடையே மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க உள்ளது.கொல்கத்தா-குல்னா இடையேயான பந்தன் எக்ஸ்பிரஸ் வாரத்தில் இரண்டு நாட்களும், ​​மைத்ரீ எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்களும் இயங்க உள்ளது.

இதுபற்றி கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் ஏகலவ்யா சக்ரவர்த்தி கூறுகையில், ”கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்தப்பபட்ட பந்தன் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவை இன்று துவங்கியது. மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் இயங்க உள்ளது. ஒரு ரயிலில் 450 பயணிகள் பயணிக்க முடியும். இருக்கையுடன் கூடிய ஏசி பெட்டி வசதி உள்ளது. இந்த ரயில் சேவை மூலம் இந்தியா-வங்கதேசம் இடையே சுற்றுலா மேம்படும். மேலும், வங்கதேசத்தில் இருந்து ஏராளமான மக்கள் மருத்துவ வசதி பெற இந்தியா வருகின்றனர். இவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

மேலும் இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்க மாநிலம் நியூஜால்பைகுரி நகருக்கும் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கும் இடையே மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் புதிதாக இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் சேவை ஜூன் 1ல் துவங்க உள்ளது. இந்த புதிய சேவையானது வடக்கு வங்கதேச மக்கள் டார்ஜிலிங் மலைகள், தேயிலை தோட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நிலையில் புதிய ரயில் சேவையானது மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!