ஒடிசாவை தாக்கிய பைலின் புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பயங்கர புயலாக மாநில ஒடிசாவை நோக்கி நகர தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை ஒடிசாவில் உள்ள கோபால்பூரில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 220 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமாக காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின் கம்பங்கள் முறிந்தன. 5 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி, பல இடங்களில் கரையை உடைத்து கொண்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் மட்டும் 9 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஆந்திராவில் 2 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஒடிசாவில் புயல் தாக்குதலில் 9 பேர் இறந்ததாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது.
நேற்று 14 சடலங்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் 14500 கிராமங்கள் புயலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக இன்னும் 2 நாள் ஆகும் என மாவட்ட கடலெக்டர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலிருந்து இரும்பு தாது ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த கப்பலின் ஊழியர்கள் அனைவரும் படகில் தப்பினர். அவர்களை கடலோர பாதுகாப்பு படையின் டோர்னியர் விமானம் கண்டுபிடித்து மீட்டது.
















