காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் வருகிற நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கருணாநிதியின் கோரிக்கையை, தி.மு.க.வின் பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1 ஆம் திகதி முதல் தியாகு உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்தும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கட்டிதத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, தனது உண்ணாவிரதத்தைக் கைவிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கருணாநிதியை கேட்டுக் கொண்டுள்ளார்.
















