பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்

ramadasபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகின் மிகக் கொடுமையான இனப்படுகொலையையும், மனித உரிமை மீறலையும் நடத்திய இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும். பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழகத்தில் பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

பொதுநலவாய அமைப்பில் ஒரு நாடு தொடர்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ, அவற்றில் ஒன்று கூட இலங்கைக்கு இல்லை; பொதுநலவாய அமைப்பிலிருந்து ஒரு நாடு நீக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. எனவே, பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதமே மத்திய அரசை நான் வலியுறுத்தினேன்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், மத்திய அரசோ கேளாக்காதினராய் இருந்து வருகிறது. மாறாக, தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்குவது, இலங்கையில் மின் நிலையங்களை அமைத்துத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இன்னொருபுறம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்; தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என்று இராஜபக்சே சவால் விடுகிறார்.

ஈழத் தமிழர்களுக்கு 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும் நிலையில், தமிழர்களுக்கு நில அதிகாரமோ அல்லது காவல்துறை அதிகாரமோ வழங்கப்படாது என்று கூறி இந்திய அரசுக்கு அவமரியாதை செய்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்தியாவின் அமைதி மிகவும் ஆபத்தானது. கடந்த மார்ச் மாதத்தில் கூட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, இறுதி வரை அமைதி காத்த இந்தியா, கடைசி நேரத்தில் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து ராஜபக்ஷவைக் காப்பாற்றியது.

இப்போது கூட பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் விசயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வேன் என பட்டும்படாமலும் தான் பிரதமர் கூறுகிறாரே தவிர, தமிழர்களின் நலனைவிட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது எனக்கு முக்கியமல்ல என்று உறுதிபட தெரிவிக்க மறுக்கிறார். எனவே, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த விசயத்தில் மழுப்பலாக பதிலளிப்பதை விடுத்து, தனது நிலைப்பாட்டை இந்தியா உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது; அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 23 ஆம் திகதி கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து, தீர்மானத்தின் நகலைக் கொடுத்து அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply