செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள் நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!