சூரியன் மறைந்த பின்னும் ஆறு மணி நேரத்திற்கு மின்சாரம் உற்பத்தி செய்து அமெரிக்க சூரிய சக்தி மின் நிலையம் ஒன்று சாதனை படைத்து உள்ளது.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வெற்றி, சூரிய சக்தி ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சூரிய ஒளி, சூரிய வெப்பம் ஆகிய இரண்டு வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மூலம் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் சூரிய ஒளி தொழில்நுட்பம் பரவலாக உள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பம் மூலம், வெயில் உள்ள வேளைகளில் மட்டும் தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வழக்கமாக, இரவு நேரங்களில் மின் தேவை அதிகரிக்கும்.
அப்போது இந்த தொழில்நுட்பத்தால் கைகொடுக்க முடியாது. இந்த குறைபாட்டை தீர்க்கும் விதத்தில் தற்போது சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின், அரிசோனா மாநிலத்தில் அமைந்து உள்ள ´சோலானா´ என்ற தனியார் மின் நிலையம் சாதனை படைத்து உள்ளது.
அரிசோனா மாநில, பாலைவன பகுதியில், 1,920 ஏக்கர் பரப்பளவில் சோலானா சூரிய சக்தி மின் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு, பிறை சந்திரன் வடிவத்தில் உள்ள 2,700 பரவளைய கண்ணாடிகளில் சூரிய வெப்பம் ஒருமுனைப்படுத்தப் படுகிறது.
இந்த வெப்பம், சூடு தாங்கக் கூடிய செயற்கை எண்ணெயை, 390 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. பின் அந்த எண்ணெய், கொதிகலன்களை சுற்றி சுழன்று, நீரை கொதிக்க வைத்து, வழக்கமான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது.
ஒரு பகுதி வெப்பம் இப்படி செலவிடப்பட, இன்னொரு பகுதி, உருக்கு நிலையில் உள்ள உப்பில் சூடேற்றி, அதை 276 டிகிரி செல்சியசில் வைக்கிறது.
இந்த நிலையில் உள்ள உப்பு, வெப்பத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது. சூரியன் மறைந்த பின், உப்பில் உள்ள வெப்பம் கொதிகலன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம், சோலானா மின் நிலையத்தில், 280 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. சூரியன் மறைந்த பின்னும், ஆறு மணி நேரம் வரையில் இதே அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என, சோலானா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த மின்சாரம், 70 ஆயிரம் வீடுகளுக்கு வினியோகிக்க போதுமானது என சோலானாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அரிசோனாவில் மின்சாரம் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது.
















