கணவருக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை கொன்று குப்பையில் வீசிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் பழநி பெரியநாயகியம்மன் கோயில் அருகே குப்பை மேட்டில் பெண் சிசு சடலம் கிடந்தது. பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் பழநி பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி கவுரி தேவி, 34, வி.ஏ.ஓ., நகுலனிடம் நேற்று சரணடைந்தார்.
விசாரணையில், கவுரிதேவிக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். நீர்ப்பை வீக்க நோயால் அவதிப்பட்டதால் மீண்டும் கர்ப்பம் தரிக்காமல் இருக்க கருத்தடை சாதனம் பயன்படுத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக மீண்டும் கர்ப்பம் தரித்ததால் கணவர் சந்தேகப்படுவார் என்ற பயத்தில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
வயிறு வீக்கத்தை நீர்ப்பை வீக்க நோயால் ஏற்பட்டது என கூறி வந்துள்ளார். கடந்த அக்.,14ல் கணவர் வெளியூர் சென்றதையடுத்து ஏற்கனவே வைத்தியசாலையில் வேலைபார்த்த அனுவபத்தால் தனக்கு தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தை பெற்றுள்ளார்.
பின் அந்த சிசுவின் கழுத்தை சேலையால் நெரித்து கொலைசெய்து குப்பை மேட்டில் வீசியுள்ளார்.
இதுகுறித்து கணவருக்கு தெரிய வரவே கவுரிதேவி சரணடைந்தார். கவுரிதேவியை பொலிசார் கைது செய்தனர்.
















