இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க சிவில் லைன்ஸ் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி படங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்தப் படங்களுக்கு கீழே, “அம்மாவுக்கு இப்போது அடிக்கடி சுகவீனம். சகோதரருக்கு (ராகுல் காந்தி) பணிச்சுமை. பூல்பூரில் பிரியங்கா வேட்பாளர் ஆக வேண்டும். கட்சிக்கு பிரசாரம் செய்ய வேண்டும். 3-வது முறையாக காங்கிரஸ் அரசு அமைய உதவ வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
சோனியா காந்திக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போய் விடுவதால், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு போட்டியிட்ட பூல்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா களமிறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காங்கிரஸ் சார்பில் விளம்பரப்பலகை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாநில தலைமை, இதற்கு காரணமான மாவட்ட கட்சி நிர்வாகி ஹாசீப் அகமதுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதை கட்சியின் மூத்த தலைவர் சிரீஷ் சந்திர துபே உறுதி செய்தார். ஹாசீப் அகமதுவின் விளக்கம் பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என துபே தெரிவித்தார்.
















