சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
இந்தியாவின் மராட்டிய மாநிலம் தானே நகர பொலிஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே (வயது 31).
விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர பொலிஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார். கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம்.
ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர்.
அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது ‘எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை’ என்று சோகத்துடன் தெரிவித்தார்.
ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது.
இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு, கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.
உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார்.
மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.
இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார்.
அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.
கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு வரையிலும் படித்தார்.
அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார். மேலும் முதியவர் ஒருவர், மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.
கடந்த 4-ம் திகதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார்.
அங்கு இருந்த பெண்ணிடம் ‘நாங்கள் பொலிஸ், உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா?’ என்று கேட்டார்.
அதற்கு, ‘ஆமாம்’ என்று கூறிய அந்த பெண், தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று பச்சை குத்தியிருக்கும் என்றார்.
உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் “நான்தான் உங்களுடைய மகன்” என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார்.
இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.
















