ஜனவரி 5இல் மாகாணசபைகளுக்குத் தேர்தல்?

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து அடுத்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கூடி முடிவெடுக்கவுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற குழு வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டிருக்கும் நிலையில் எல்லைநிர்ணயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் புதிய முறையில் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. புதிய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடாப்பிடியாக இருந்துள்ளது. எனினும், சிறுபான்மைக் கட்சிகள் பழைய முறையில் அதாவது விகிதாசார முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.

எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்பட்ட குறைபாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியதுடன், புதிய தேர்தல் முறையிலன்றி பழைய முறையில் தேர்தலை நடத்தினால் அது மோசடிகளுக்கே வழிவகுக்கும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கட்சிகளுக்கிடையில் மாற்றுக் கருத்து நிலவியதால் எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எமக்குத் தெரிவித்தார்.

எனினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது என்பதில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கிறிஸ்மஸ் விடுமுறைகள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு பொருத்தமானதொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு நேற்றைய கூட்டத்தில் இணங்கப்பட்டுள்ளது.

எனினும், எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பதை முடிவு செய்யும் நோக்கில் எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடுவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

தேர்தல்களை நடத்துவதற்கான தடைகளை பாராளுமன்றம் நிவர்த்திசெய்து தருமானால் முன்மொழியப்பட்ட இரண்டு திகதிகளில் ஒரு திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் முடிவடைந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது. அதேநேரம், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் முடிவடையவுள்ளன. இந்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவது பற்றியே கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!