அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதாவிற்கு செனட் சபையும், பிரதி நிதிகள் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக முடங்கிக் கிடந்தது. பல அரசு துறைகள் மூடப்பட்டதால், சம்பளம் இல்லா விடுப்பில் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். இந்த நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தபடி, கடனுக்கான உச்சவரம்பு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர்களாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும், ஜனவரி 2015 வரையிலான நிதி ஒதுக்கீடுக்கும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். முதலில், இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபையில் இந்த மசோசா நிறைவேறியது.
அதன் பின்னர், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையிலும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதையடுத்து, இன்னும் சில தினங்களில் மூடப்பட்டிருக்கும் அரசுத் துறைகள் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
















