வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற இலஞ்சம் கேட்கிறார் இராணுவ பேச்சாளர்

lk-armyஅரசாங்கம் இராணுவத்திற்கான இடவசதி மற்றும் வாழ்வாதார வசதிகளுடன் அவர்கள் வாழ்வதற்கான இன்னொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் நாம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.

எனவே வடக்கு, கிழக்கில் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் இராணுவம் பொறுப்புக் கூற முடியாது. எமது கடமை மக்களை பாதுகாப்பதே தவிர சீரழிப்பதல்ல. வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவதில் சில அமைப்புகளும் வடக்கின் கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும் மும்முரமாக செயற்படுகின்றன. இலங்கையில் அமைதியானதொரு சூழலினை ஏற்படுத்தியதில் இலங்கை இராணுவத்தினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது இலங்கையர்களுக்கு மட்டுமே தெரியும்.

அத்துடன் யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், வடக்கில் பொதுமக்களின் இழப்புகளை விடவும் அதிகமாக எமது இராணுவ வீரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பில் எந்த அமைப்புகளோ அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவோ பேசத் தயாராக இல்லை. இருப்பினும் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டி வலியுறுத்தினால் எமது இராணுவத்தினர் வாழ்வதற்கான இன்னொரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே அரசாங்கம் இராணுவத்திற்கான இடவசதிகளையும் வாழ்வாதார வசதிகளையும் பெற்றுத் தருமானால் நாம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் ரீதியில் வன்முறைக்கு உள்ளாக்கினர் என்ற குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply